பழுது நீக்க விடப்பட்ட காரில் இயந்திரத்தை மோசடி செய்த மெக்கானிக் மீது புகார்
விருதுநகர் அருகே பழுது நீக்கம் செய்வதற்காக விட்டிருந்த காரில் இயந்திரம் மற்றும் உதிரி பாகங்களை கழற்றி மோசடி செய்த மெக்கானிக் மீது உரிமையாளர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
விருதுநகர் அருகே பழுது நீக்கம் செய்வதற்காக விட்டிருந்த காரில் இயந்திரம் மற்றும் உதிரி பாகங்களை கழற்றி மோசடி செய்த மெக்கானிக் மீது உரிமையாளர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
விருதுநகர் அருகே ஆமத்தூர் போஸ் காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் நாகராஜ்(38). இவருக்கு சொந்தமான டாடா சுமோ வாகனம் பழுதானது. இந்த நிலையில் இதே பகுதியில் பழுது நீக்கும் ஷாப் நடத்தி வரும் தங்கப்பாண்டி என்பவரிடம் பழுது நீக்குவதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு விட்டுள்ளார். அதையடுத்து அடிக்கடி சென்று பழுது சரி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டாராம். அதற்கு, சரிசெய்யவில்லை எனக் கூறி தாமதம் செய்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 25-ம் தேதி சென்று கேட்டதோடு, வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது, அந்த வாகனத்தில் இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் கழற்றப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து மெக்கானிக்கிடம் கேட்டதற்கு வீட்டில் வைத்துள்ளதாக கூறி எடுத்து வரச்சென்றாராம். ஆனால், நீண்ட நேரமாகியும் வரவில்லையாம்.
பின்னர் இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் செவல்பட்டி செல்லப்பாண்டி என்பவரின் வாகனத்தில் இயந்திரத்தை ஏற்றி மதுரை ஒத்தக்கடையில் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்தது. உடனே இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் நாகராஜ் புகார் செய்தார். அதன் பேரில் மெக்கானிக் தங்கப்பாண்டி(37), மற்றும் செல்லப்பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement