நாளை பாஜகவில் இணைகிறார் எஸ்.வி. சேகர்
பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பிரபல மேடை நாடகக் கலைஞரும், திரைப்பட நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில்
முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிரபல நடிகருமான எஸ்.வி. சேகர், நாளை (அக். 8) பாஜகவில் இணைகிறார்.
பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பிரபல மேடை நாடகக் கலைஞரும், திரைப்பட நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2009 ஜூலை 30-ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு சட்டப்பேரவையிலும், வெளியிலும் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அவர், திமுகவில் சேரப்போவதாகவும் பேசி வந்தார்.ஆனால், கடந்த 2011 பிப்ரவரி 6-ஆம் தேதி மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விரும்பிய அவருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்கவில்லை. அதனால் அவர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து 2011 ஏப்ரல் 14-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து அவரை அப்போது தலைவராக இருந்த தங்கபாலு நீக்கினார்.அதன்பிறகு பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த எஸ்.வி. சேகர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்தும் பேசினார்.இந்நிலையில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் எஸ்.வி. சேகர் பாஜகவில் இணைய இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement