மணிமுத்தாறு அருவியில் பாறைக்கு வெடி வைப்பு: இருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் பாறைக்கு வெடி வைத்து உடைத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சார் ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் திங்கள்கிழமை அருவிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் பாறைக்கு வெடி வைத்து உடைத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சார் ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் திங்கள்கிழமை அருவிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதற்கிடையே பாறைக்கு வெடி வைத்தாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைத்தல், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக அருவியில் உள்ள பாறையை உடைத்து மேம்படு்த்தும் பணி வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் அருவியில் பாறைக்கு வெடி வைத்து உடைத்ததாக புகார் எழுந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆட்சியர், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் திங்கள்கிழமை அருவிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது வட்டாட்சியர் ரா. சரஸ்வதி, புலிகள் காப்பக துணை இயக்குநர் சி. குருசாமி, வனச்சரகர் எம். பாலேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதற்கிடையே அருவியில் சிங்கம்பட்டியை சேர்ந்த தளவாய் என்பவர் குளிக்க சென்றபோது, அங்கு கடையம் அருகே ஆவுடையானூரை சேர்ந்த குமரேசன் (54), கல்லிடைக்குறிச்சி மேல்முகம்நாடார் தெருவை சேர்ந்த சிங்கத்துரை (35) ஆகியோர் பாறைக்கு வெடி வைத்ததாக அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.