முகப்பு
தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்: ஆர்.சரஸ்வதி

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னமும், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னமும் கிடைத்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி உள்ளார் என்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:19 PM
பகிர்:

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னமும், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னமும் கிடைத்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி உள்ளார் என்று கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

கடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் அதிமுக 42-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான குமரன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மகளிரணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவருமான சி.ஆர். சரஸ்வதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், கடலூர் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன், துணை தலைவர் சேவல் குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் சமூக நல வாரியத் தலைவர் சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:

தனக்கென வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆர். இன்றும் மக்கள் தலைவராக போற்றப்பட்டு வருகிறார். அவரது வழியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்று இந்திய மக்கள் மட்டுமின்றி உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் மக்களும் இணைய தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் மட்டுமின்றி, சொல்லாத திட்டங்கள் பலவற்றைம் நிறைவேற்றி உள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் 12 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் காரணம். அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற 1991-1996, 2001-2006 ஆம் ஆண்டுகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. மேலும் புதிய மின்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னமும், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னமும் கிடைத்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் ஆகி உள்ளார். முதல்வர்  ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ள அம்மா உணவகத்தில் 1 ரூபாய்க்கு இட்லி, 3 ரூபாய்க்கு தயிர்சாதம் கிடைக்கிறது. இந்த உணவகம் நகராட்சி பகுதிகளிலும் விரைவில் வர இருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா. அனைத்து தகுதிகளும் உள்ள ஜெயலலிதா பிரதமராக வர 40 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் சி.ஆர்.சரஸ்வதி. நகரமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.