ரேஷன் கடை முற்றுகை : பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்காததைக் கண்டித்து, திங்கள்கிழமை பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டதுடன்
திருவண்ணாமலை அருகே அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்காததைக் கண்டித்து, திங்கள்கிழமை பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை-திருக்கோயிலூர் சாலையில் உள்ளது மேலத்திக்கான் ஊராட்சி. இவ்வூராட்சியில் உள்ள ரேஷன் கடையில் 400 குடும்ப அட்டைகள் உள்ளன. இக் கடையில் பொதுமக்கள் எப்போது சென்று கேட்டாலும் பொருட்கள் இல்லை என்றே விற்பனையாளர் கூறுகிறாராம்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், அக்டோபர் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள் இதுவரை வழங்கவில்லை என்று கூறி திங்கள்கிழமை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, திருவண்ணாமலை-திருக்கோயிலூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அச் சாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.