மணிமுத்தாறு அருவி நாளை மறுநாள் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு வளையம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் அருவியில் சுற்றுலாப் பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு வளையம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, பாண தீர்த்த அருவிகள் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.மணிமுத்தாறு அருவியில் பாதுகாப்பு தடுப்பு வளையம் சேதமடைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் குளிக்கும் நிலை இருந்தது. மேலும் அருவியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அருவியில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பராமரிப்பு பணிகளுக்காக மணிமுத்தாறு அருவி மூடப்பட்டது. அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் அதிகமானோர் நின்று குளிக்கும் வகையில் பாறையை உடைத்து அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு கான்கீரிட் தளம், சங்கிலியுடன் பாதுகாப்பு தடுப்பு வளையம், பாறையில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சங்கிலி போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டது.பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து அக். 28 ம் தேதி (திங்கள்கிழமை) முதல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கலாம் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.