விருதுநகர்: பட்டாசு ஆலை வேலைக்கு போகாத கிராம மக்கள்; விவசாயத்திற்கு மட்டும் முக்கியத்துவம்
விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, சாத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய வட்டார பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்திற்கும் இடையிடையே தடுக்கி விழுந்தால் ஒரு பட்டாசு ஆலை உள்ளது. இப்பகுதியில் உள்ள
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வேலைக்கு போகாமல், விவசாயம் மற்றும் துணைத் தொழிலான ஆடு, மாடு தொழிலுக்கு மட்டும் கிராம மக்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, சாத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய வட்டார பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்திற்கும் இடையிடையே தடுக்கி விழுந்தால் ஒரு பட்டாசு ஆலை உள்ளது. இப்பகுதியில் உள்ள அதிகம் பேருக்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் தொழிலாகவும் இருக்கிறது. இத்தொழில் மூலம் ஒவ்வொரு நாளும் ரூ.300 முதல் ரூ.400 வரையில் தொழிலாளிக்கு கூலியாக கிடைக்கிறது. அதேபோல், ஒப்பந்தம் பெற்று செய்தால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வரையில் கூலி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.இத்தொழில் மூலமே கிராம மக்கள் வாழ்வாதாரமும் பெற்று வருகின்றனர்.
ஆனால், கிராமத்தைச் சுற்றிலும் பட்டாசு ஆலைகள் இயங்கி வந்தாலும், அப்பணிக்கு செல்லாமல் விவசாயம், துணை தொழில்களான ஆடு, மாடு மேய்த்தல் உள்ளிட்டவைகளில் வினோதமாக கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கன்னிசேரி-வெம்பக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் குண்டும், குழியுமான ஒரு வழிப்பாதையில் 1 கீ.மீ தூரத்தில் உள்ளது பூசாரிநாயக்கன்பட்டி கிராமம். இங்கு ஒரே சமூகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், குறைந்தது 10 பேர் முதல் அதிகமாக 30 பேர் வரையில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். ஆனால், பூர்வீகத் தொழிலான விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இவர்கள் விவசாய பம்ப்செட் தோட்டங்களிலும், மானாவரி நிலங்களிலும் மக்காச்சோளம், தானிய வகைகள் பயிரிடுகின்றனர்.
Advertisement
மேலும், பண பரிமாற்றத்திற்காக மூலிகை பயிர்களான நித்திய கல்யாணி, அவுரி உள்ளிட்டவைகளை பயிர் செய்கின்றனர். அதோடு, துணைத் தொழிலாக ஆடுகள், மாடுகள் மேய்த்தல் தொழிலிலும் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 50 முதல் 100 ஆடுகள் வரையில் இருக்கிறது. இக்கிராமத்தில் அனைவருமே விவசாய வேலைக்குத்தான் செல்வதையே விரும்புகின்றனர். தீபாவளி பண்டிகைக்கும் அதிகமாக விலைக் கொடுத்து பட்டாசுகள் கொளுத்தாமல் எளிமையாகவும் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், வெளியூர் வேலைக்கும், பட்டாசு தொழிலுக்கும் சென்றால் பண்பாடு கலாச்சாரம் மாறிவிடும் என்பதால் கட்டுப்பாடுடன் வாழ்ந்து வருகின்றனர். இதுவரையில் வங்கியில் கடன் வாங்காத கிராமமாக இருந்த நிலையிலும், பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது. அதற்கு அரசு வழங்கிய வறட்சி நிவாரணம் கூட இங்குள்ள ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. அதேபோல் கூட்டுக்குடும்பமாக ஒவ்வொரு வீட்டிலும் 4 குடும்பங்கள் வரையில் வாழ்ந்து வருகின்றனர். அதனால், அரசு திட்டத்தில் குடியிருப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே கிராம மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
இது குறித்து காசிராஜன் என்பவர் கூறுகையில், இக்கிராமத்தைச் சுற்றிலும் அதிகமாக பட்டாசு ஆலைகள் செயல்படுகிறது. ஆனாலும், இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் யாருமே வேலைக்குச் செல்வதே கிடையாது. இக்கிராமம் உருவானதிலிருந்து இதுவரையில் யாரும் பட்டாசு ஆலை வேலைக்குச் சென்றதே கிடையாது. இதுபோன்ற வேலைக்குச் சென்றால் வெளி ஆள்களுடன் பழக்கம் ஏற்படும் அதனால் பண்பாடு கலாசாரம் மாறிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயத் தொழிலையே உயிர் மூச்சாக செய்து வருகிறோம். ஆண்கள் மட்டும் வெளியூர்களுக்கு சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி விடுவோம். அதேபோல், பெண்கள் யாரும் வெளியிடங்களுக்குச் சென்றால் அடுத்த வீடுகளிலும், ஹோட்டல்களிலும் சாப்பிடும் பழக்கம் கிடையாது.
இது தொடர்பாக முத்துலட்சுமி(35) என்பவர் கூறுகையில், எங்கள் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அந்த பண்பாடுடன் வாழவே விரும்புகிறோம். அதே சமயத்தில் விவசாய வேலை மற்றும் ஆடு, மாடுகள் மேய்ப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவோம். எங்கள் கிராமத்தில் இதுவரைக்கும் பட்டாசு ஆலை நடத்துவதற்காக நிலத்தை விலைக்கு கேட்டுள்ளனர்.
உயிரே போனாலும் விளைநிலத்தை யாருக்கும் விற்கமாட்டோம். தற்போது, மழையில்லாமல் மானாவாரி பயிர்கள் கருகி வருகிறது. ஆண்கள் பள்ளிகளுக்கும், உயர் கல்வி கற்கவும் செல்லாலம். ஆனால், பெண்கள் உள்ளூர் பள்ளியில் பருவ வயதை அடையும் வரையில் படிக்கலாம். அதையடுத்து, பருவ வயதை அடைந்ததும் கிராமத்தை விட்டு திருமணமாகி செல்லும் வரையில் விவசாய கூலி வேலைக்குத் தவிர எங்கும் அனுமதிப்பது கிடையாது என்றார்.