பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை காலை நடந்த தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய தளவாட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது மர்மநபர்களின் சதிவேளையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப் பள்ளியில் 737 மாணவ, மாணவிகள் படிப்பதுடன், தலைமையாசிரியர் உள்பட 36 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளிக்கு சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே உள்ள பழைய ஓட்டுக் கட்டடத்தில் பெருமளவில் தீ பற்றி எரிந்துள்ளது. இதை கவனித்த அப்பகுதி மக்கள் பேளுக்குறிச்சி காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ராசிபுரம் தீயணைப்புப் படைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புக் குழுவினர் தொடர்ந்து 3 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
எனினும், அக்கட்டடத்தில் இருந்த உடைந்துபோன 70 மர மேஜை, நாற்காலிகள், 20 இரும்பு மேஜை, நாற்காலிகள் மற்றும் கட்டடத்தின் கூரை என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இக்கட்டடத்தின் அருகே கணினி அறைகள் மற்றும் பிற வகுப்புகளும் உள்ளன. ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ, மற்ற கட்டடங்களுக்கும் பரவியிருந்தால் சேதம் மேலும் அதிகரித்திருக்கக்கூடும். அதிர்ஷ்டவசமாக அதற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த தீ விபத்துக்கு மர்மநபர்களின் சதிவேளையே காரணம் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பள்ளித் தலைமையாசிரியர் அத்தியண்ணன் கூறுகையில், சத்துணவு சமையல் கூடத்துக்கு பயன்படுத்தும் தென்னை மட்டைகள் இக்கட்டடத்தின் அருகே போட்டு வைக்கப்பட்டிருந்தன. மின்சார கசிவு ஏற்பட்டு அந்த தென்னை மட்டையில் தீ பரவி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது என்றார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், வருவாய்த்துறை ஆய்வாளர் வசந்தி, சுகன்யா ஆகியோர் பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட்டனர். தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து பேளுக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.