நாமக்கல்லிலுள்ள பிரபல தனியார் பள்ளி மாணவர் தூக்கிட்டு இறந்ததை அடுத்து அப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பல்வேறு தகவல் கிடைக்கப்பெற்றிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
நாமக்கல் காவெட்டிப்பட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ் 1 மாணவன் எம்.மோகன்ராஜ்(15), வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு இறந்தார். அவரது சாவில் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அம்மாணவனின் தந்தை மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளரான தங்கவேல், விடுதி காப்பாளர் ரேணுசிங் மற்றும் சக மாணவன் கார்த்திக் ஆகியோரை நாமக்கல் போலீஸார் கைது செய்தனர். இதில் தங்கவேல், ரேணுசிங் ஆகியோர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையிலும், மாணவன் கார்த்திக் சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மோகன்ராஜ் தங்கியிருந்த அறையில் உடன் தங்கிருந்த மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி, மோகன்ராஜ் தற்கொலை செய்வதற்கு முன் உடனிருந்த ஒரு மாணவனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், விடுதியின் மூன்றாம் மாடியிலுள்ள மோகன்ராஜ் தங்கியிருந்த அறையில் மொத்தம் 16 மாணவர்கள் தங்கியிருந்தனர். இதில், நவனீதகிருஷ்ணன், பிரகாஷ் ஆகிய இரு மாணவர்களிடையே கடந்த வாரம் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்விரு மாணவர்களும் எழுப்பிய சப்தம் வெளியில் கேட்காமல் இருக்க மற்ற மாணவர்கள் அறை கதவை உள்புறமாக தாழிட்டுள்ளனர். அப்போது பக்கத்து அறையில் தங்கியிருந்த மாணவன் கார்த்திக், கதவை திறக்கக்கூறி தட்டினாராம்.
சிறிதுநேரம் கழித்து கதவை திறந்த மோகன்ராஜிடம் கார்த்திக் சண்டை போட்டுள்ளார். இதன்படி, கார்த்தி்க், மோகன்ராஜ் இடையே தொடங்கிய பிரச்னை நீண்டு கொண்டே சென்றுள்ளது. ஒருகட்டத்தில் வேறு வழியின்றி மோகன்ராஜ் இப்பிரச்னை குறித்து பள்ளி முதல்வர் சந்திரசேகர் மற்றும் பள்ளித் தலைவர் தங்கவேல் ஆகியோரிடம் தெரிவித்தாராம். இதையடுத்து, பள்ளித் தலைவர் தங்கவேல் இரு மாணவர்களையு்ம அழைத்து பேசுகையில், நடந்த பிரச்னை அனைத்துக்கும் மோகன்ராஜ் மட்டுமே காரணம் என கார்த்திக் கூறியுள்ளார்.
இதை உண்மையென ஏற்றுக்கொண்ட பள்ளித்தலைவர் மோகன்ராஜை கடுமையாக திட்டியதுடன், அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விடுதிகாப்பாளரும் திட்டியதால் மனமுடைந்த மோகன்ராஜ், வெள்ளிக்கிழமை இரவு மற்ற மாணவர்கள் படிக்கச் சென்ற சமயத்தில் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது என்றனர். தொடர்ந்து மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மோகன்ராஜின் உடல் சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.