நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிநேரம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிநேரம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் நான்கரை ஆண்டு மருத்துவப் படிப்பு முடித்து ஓராண்டாக பயிற்சி மருத்துவர்களாக 140 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் இவர்கள் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் பணியை முடித்துவிட்டு வந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு முடிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களில் கட்டாயமாக ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் சங்கத் தலைவர் டி.முகுந்தன் கூறியது: இளநிலை மருத்துவப் படிப்பு முடிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களில் ஓராண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என மத்திய அரசு மசோதா கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய மருத்துவர்கள் உள்ளனர். மேலும், அண்மையில் 900 மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அரசு நியமித்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்தைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுதான் பணியாற்ற வேண்டியிருக்கும். மேலும், முதுநிலை மருத்துவப் படிப்புகளை உடனடியாக தொடர முடியாத நிலை ஏற்படும்.
மேலும், ஏற்கெனவே நான்கரை ஆண்டு மருத்துவக்கல்வி, ஓராண்டு பயிற்சி முடித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதுநிலைப் படிப்புக்கு சேரும் நிலையுள்ளது. இப்போது கூடுதலாக ஓராண்டு கட்டாயம் என்றால் முதுநிலைப்படிப்பு கனவாகவே அமையும். சிறந்த மருத்துவர்களும் உருவாவது கடினம். எனவே, மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஒரு மணிநேர கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வரும் 22ஆம்தேதி சென்னையில் மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி மருத்துவர் சங்கத்தினர் ஆலோசித்து அடுத்தக்கட்ட போராட்டங்களை அறிவிப்போம் என்றார்.
இவர்களது போராட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவிப்பதாக மாணவர் சங்கத் தலைவர் அடோல்ப் ஜியோ தெரிவித்தார். மாணவர்களது இந்தப் போராட்டத்தால் அரசு மருத்துவமனையில் ஒரு மணிநேரம் பரபரப்பு நிலவியது.