ராஜபாளையம் அருகே நிதி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 பேர் மீது போலீஸில் புகார்
விருதுநகர் அருகே நிதி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்தனர்.
விருதுநகர் அருகே நிதி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பண்ணையார் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்(33), வன்னியம்பட்டி அருகே நூர்சாகிபுரம் சீனிவாசன் ஆகிய இருவரும் சேர்ந்து சாட்சியாபுரத்தில் பெஸ்ட் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதனுடைய கிளை அலுவலகம் ராஜபாளையத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனத்திற்கான முகவர்களையும் நியமனம் செய்துள்ளனர். இவர்கள் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் 20 மாதங்களுக்கு தருவதாக கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளனர். இதை உண்மையென நம்பிய முகவூரைச் சேர்ந்த முகவர் ஜெயபாஸ்கரன் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என 30-க்கும் மேற்பட்டோரிடமிருந்து ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் பணம் வசூல் செய்துள்ளார்.
எனவே முதலீட்டுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் காசோலையாக அளித்து வந்தார்களாம். இந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்திலிருந்து பணம் வராததால் ஜெயபாஸ்கரனிடம் முதலீடு செய்தவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், நிதி நடத்துகிறவர்கள் கொடுப்பதாக தெரிவித்தார்களாம். முதலீடு செய்தவர்கள் குறிப்பிட்ட நாளில் முதலீட்டுக்கான மாதத் தவணையும் மற்றும் முதல் தொகையையும் உடனே வேண்டும் என முகவரிடம் கேட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயபாஸ்கரன் நிதி நிறுவனத்திற்கு சென்ற போது பூட்டியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், விசாரித்ததில் இருவரும் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. உடனே முகவர் ஜெயபாஸ்கரன், முதலீடு செய்த 20 பேருடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் ஆறுமுகம் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement