சிதம்பரம் அருகே சாயத் தொழிற்சாலையை கண்டித்து 20 கிராம மக்கள் உண்ணாவிரதம்
சிதம்பரம் வட்டம் பெரியபட்டு அருகே சைமா என்ற தனியாருக்கு சொந்தமான சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை அமைந்தால் அப்பகுதி
சிதம்பரம் அருகே சாயத்தொழிற்சாலையை கண்டித்து 20 கிராம மக்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் வட்டம் பெரியபட்டு அருகே சைமா என்ற தனியாருக்கு சொந்தமான சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சாயத்தொழிற்சாலை அமைந்தால் அப்பகுதி மக்களின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், தொழிற்சாலையை இப்பகுதியில் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி பெரியப்பட்டு அருகில் உள்ள பெரியாண்டிகுழி, சாமியார்பேட்டை, வாண்டையாம்பள்ளம், குமாரப்பேட்டை, அன்னப்பன்பேட்டை, ரெட்டியார்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் தமிழநாடு விவசாயிகள் சங்கம், கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்டோர் பெரியப்பட்டு கடைவீதியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாமியார்பேட்டை கிராமத் தலைவர் முருகன், வாண்டையாம்பள்ளம் கிராமத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், பரங்கிப்பேட்டை ஒன்றிய தமிழநாடு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கருனைச்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
போராட்டக் குழுவைச் சேர்ந்த கதிர்வேல், பரணி, பெரியாண்டிகுழி கிராமத் தலைவர் கலியபெருமாள், பெரியபட்டு கிராமத் தலைவர் கலியமூர்த்தி, சிலம்பிமங்கலம் கிராமத் தலைவர் எத்திராஜ், ஆண்டார்முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன், காயல்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடாது, சாயக் கழிவுகளை கடலில் விடுவதால் மீனவர்களின் வாழ்வாதாராம் பாதிப்படையும், தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அழிக்கக்கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.