முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமராக வர ஜெயலலிதாவிற்கு தகுதி கிடையாது: பாமக எம்எல்ஏ ஜெ. குரு

பிரதமராக வர ஜெயலலிதாவிற்கு என்ன தகுதி உள்ளது. மாநிலத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுக்க முடியாதவர், பிரதமராகி இந்தியாவில் எப்படி சிறப்பான ஆட்சி செய்ய முடியும் என பாட்டாளி மக்கள் கட்சி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

பிரதமராக வர ஜெயலலிதாவிற்கு என்ன தகுதி உள்ளது. மாநிலத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுக்க முடியாதவர், பிரதமராகி இந்தியாவில் எப்படி சிறப்பான ஆட்சி செய்ய முடியும் என பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ.குரு சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி புதிய வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் அறிமுகக்கூட்டம் மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரம் தனலட்சுமி திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு பங்கேற்று பேசியதாவது:

ஜெயலலிதா எந்த சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியும். இலவச பொருள்களான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் ஆடு, மாடுகளை வழங்கி வருகிறார். காமராஜர் 1952-ல், மாணவர்கள் ஆடு, மாடு மேய்க்கக்கூடாது என பள்ளிக்கூடங்களை திறந்து, படிக்க சத்துணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். ஆனால் இன்று ஆடு, மாடுகளை வழங்கி ஜெயலலிதா மக்களை மேய்க்கச் சொல்லுகிறார். மதுக்கடைகளினால் தமிழகத்தில் 35 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தலில் சாதனை சொல்லி வெற்றி பெற முடியாமல், ரூ.300 கோடி செலவு செய்து, 30 அமைச்சர்களை அனுப்பி வெற்றி பெற வைத்தவர் ஜெயலலிதா. அதே நேரத்தில் குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கிடையாது, இலவசம் கிடையாது. மதுக்கடை கிடையாது. ஆனால் மோடியின் சிறப்பான ஆட்சியால் அங்கு அவரது கட்சி வெற்றி பெற்றது. எனவே அவர்தான் பிரதமருக்கு தகுதி பெற்றுள்ளார். திமுகவும், அதிமுகவும் இலவசத்தை வழங்கி தமிழக மக்களை கையேந்தும் நிலையில் வைத்துள்ளது.

எனவே விலைமதிப்புடைய வாக்கினை திமுக, அதிமுகவிற்கு அளித்து வீணாக்கிவிடாதீர்கள். திமுக கூட்டணிக்கான கதவை சாத்திவிட்டோம் என்று கருணாநிதி சொன்னார். அந்த கட்சியோடு கூட்டணி சேர யாருமே தயாராக இல்லாதபோது அவர் ஏன் கதவை அடைத்தார் என்றால் ஏற்கனவே கூட்டணியில் இருக்கிறவர்கள் யாரும் ஓடிப்போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் கதவை அடைத்துவிட்டோம் என்று சொன்னார்

வேட்பாளர் மணிரத்தினம் அறிமுகவிழா அல்ல இது. அவர் இத்தனை ஆண்டுகளாக மக்களுக்கு செய்து வந்த உதவிகளுக்காக, அவர் வணங்கும் நடராஜப் பெருமானால் அறிவிக்கப்பட்ட முடிசூட்டுவிழாவாகும். மணிரத்தினத்திற்கு நிகரான வேட்பாளர் யாரும் தேர்தல் களத்தில் கிடையாது. கிடைக்கவும் முடியாது. ஒரு சிலர் சமூக ஒற்றுமை ஏற்படக்கூடாது என குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் இரு சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என இளையபெருமாளுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். திருமாவளவனுடன் கைகோர்த்து கடந்த தேர்தலை சந்தித்தார். ஆனால் ஏதோ என்ன குழப்பமோ, திருமாவளவன் தற்போது போய்விட்டார்.

தமிழகத்தில் சமூக ஒற்றுமைக்கு எதிராக ஒரு சில மனக்கசப்புகளை குறிப்பிட்ட சிலர் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த கசப்புகளை இத்தொகுதியில் வேட்பாளர் மணிரத்தினம் நீக்குவார். இங்கு மட்டுமல்ல தமிழக முழுவதும் இருசமூக மக்களின் மனக்கசப்புகளை நீக்குவார். பொது வேட்பாளராக மக்கள் அவரை பார்க்கின்றனர். ஏற்கனவே பாமகவில் வெற்றி பெற்று பணத்திற்காக வேறு கட்சிக்கு இருவர் போய்விட்டனர். ஆனால் இவரிடம் பணம் உள்ளது. பணம் தேவையில்லை என்பதால் இவர் நிச்சயம் செல்ல மாட்டார். அவர் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய அங்கீகாரத்தை நாங்கள் வழங்கியுள்ளோம் என ஜெ.குரு தெரிவித்தார்

கூட்டத்தில் பாமக வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் அறிமுகவுரையாற்றினார். பாமக சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, துணைப் பொதுச்செயலாளர் கு.திருஞானம், கி.தேவதாஸ்படையாண்டவர், மாவட்டச் செயலாளர்கள் வேணு.புவனேஸ்வரன், செல்வக்குமார், வைத்தி, நகரச் செயலாளர் முத்து.குமார், தேமுதிக மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பாலு, நகரச் செயலாளர் சி.க.விஜயக்குமார், பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் சுகுமாறன், பொருளாளர் வே.ராஜரத்தினம், பொதுச்செயலாளர் துறைமுகம் செல்வம், நகரத் தலைவர் திருமாறன், மதிமுக தேர்தல் பொறுப்பாளர் குணசேகரன், பெருமாள், கே.வி.மோகனசுந்தரம், என்.எஸ்.கந்தசாமி, புதிய நீதிகட்சி மாவட்டச் செயலாளர் உமாசங்கர், நகரத் தலைவர் வி.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாமக நகரச் செயலாளர் முத்து.குமார் நன்றி கூறினார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.