கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்தண்டனை: சிதம்பரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
கொலை வழக்கு ஒன்றில் இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிதம்பரம் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
கொலை வழக்கு ஒன்றில் இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிதம்பரம் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் காயல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.பிரபு (36). இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த பி.மணிகண்டன் (27), கே.சஞ்சய்காந்தி (32) ஆகியோருக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மீன் குட்டை வைத்துள்ள பிரபு மீன்களை ஏலம் விட்டு பணம் தருவதாக இருவரிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12-3-2010 அன்று மீன்குட்டையில் பிரபு இருந்த போது, மணிகண்டன், சஞ்சய்காந்தி ஆகிய இருவரும் சென்று பணம் கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பிரபுவை தாக்கி மீன்குட்டையில் உள்ள நீரில் கழுத்தை பிடித்து அழுத்தியுள்ளனர். அப்போது அங்கு பிரபுவின் அண்ணன் மகன் ரியாஸ் வருவதை கண்டு இருவரும் பிரபுவை கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார், மேற்கண்ட இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, சிதம்பரம் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தனர். அரசு தரப்பில் வழக்குரைஞர் தேவராஜன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவுற்று விரைவு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சுபாதேவி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். குற்றம் நிருபிக்கப்பட்டதால், மணிகண்டன், சஞ்சய்காந்தி ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனையும், அபராதம் தலா ரூ.ஆயிரம் விதித்து நீதிபதி சுபாதேவி தீர்ப்பு வழங்கினார்.