முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் தொகுதியில் 'மோதிரம்' சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் திருமாவளவன்!

சிதம்பரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல.திருமாவளவன், தனக்கு 'மோதிரம்' சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:55 AM
பகிர்:

சிதம்பரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல.திருமாவளவன், தனக்கு 'மோதிரம்' சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேடு, திருவக்குளம், வாரசந்தை பகுதிகளில் சனிக்கிழமை காலை திருமாவளவன், திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் சென்று மோதிரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியது: இந்த தேர்தலில் மீண்டும், திமுக கூட்டணியில் நான் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழர் நலன்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற இந்த மக்கள் பேரியக்கம், 15 ஆண்டுகளாக தேர்தலை சந்தித்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை பெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது எனக்கூறி தனக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

பிரசாரத்தின் போது அவர் மேலும் பேசியது: 5 ஆண்டுகளில் தொகுதியில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது. திருமாவளவன் 5 ஆண்டுகளில் என்ன சாதித்துவிட்டார் என அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால் ஜெயலலிதா 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டில்தான் முதல்வராக உள்ளார். தமிழ்நாட்டில்தான் சிதம்பரம் தொகுதி உள்ளது. சிதம்பரம் தொகுதியில் எந்த வளமும் ஏற்படவில்லை என்றால், 15 ஆண்டு காலம் முதல்வராக இருந்த ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டுமா? 5 ஆண்டுகள் உறுப்பினராக பொறுப்பேற்க வேண்டுமா? என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கு சாலை போடவில்லை என்றால், திருமாவளவன் மட்டும் பொறுப்பல்ல. முதல்வரும்தான் பொறுப்பு.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிசுமை மற்றும் கல்வித்தகுதி இல்லை என காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும். ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு அரசாணை 92-ன் கீழ் அரசு கல்விக்கட்டணத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாரணை பல்கலைக்கழக நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ள பொங்கல் போனஸை வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் பணியிடை மாற்றம் செய்வதை நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என பல்கலை நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

பிரசாரத்தின் போது குமராட்சி ஒன்றிய திமுக செயலாளர் ரா.மாமல்லன், இளைஞரணி செயலாளர் ராஜேந்திரக்குமார், தேர்தல் பொறுப்பாளர்கள் வன்னிஅரசு, எல்லாலின், கவிஞர் சேரன், நந்தன், மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், நிர்வாகிகள் ரா.காவியச்செல்வன், நீதிவளவன், பாலஅறவாழி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.