முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் திருப்பாற்கடல் தூர்வாரும் பணி தொடங்கியது!

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியதுதான் திருப்பாற்கடல் குளம். இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:03 AM
பகிர்:

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் தீர்த்தகுளம், இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியதுதான் திருப்பாற்கடல் குளம். இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் ஆக்கிரமிக்கப்பட்டது. கடந்த 13-10-2008ல் இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் வாஞ்சிநாதன் என்பவர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் சிதம்பரம் உதவிஆட்சியரை அணுகி குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133-ன் கீழ் மனு செய்து நிவாரண தேடிக்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் கடந்த 2-10-2013ல் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் குளத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டது.

தற்போது இந்த ஆண்டு மீட்கப்பட்ட பகுதி மட்டும் சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது. திருப்பாற்கடல் குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ள அம்பலத்தாடி மடத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் முற்றிலும் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவ்விடத்தின் ஒருபகுதியில் தனியார் பள்ளி நடைபெற்று வருகிறது. இறைவனால் உருவாக்கப்பட்ட திருப்பாற்கடல் குளம் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே திருப்பாற்கடலை முற்றிலுமாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் உதவிஆட்சியரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில் குளத்தின் ஒருபகுதியில் தனியார் பள்ளி நுழைவுவாயில் உள்ளது. தூர்வாரப்பட்ட குளத்தின் கிழக்குப் பகுதியில் பள்ளி நிர்வாகம் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தொடங்கியது. இதற்கு நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் மற்றும் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் சென்று, திருப்பாற்கடல் குளத்தில்தான் பள்ளி நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பினை அகற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. எனவே குளத்தில் தடுப்புசுவர் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் குற்றவிசாரணை முறைச்சட்டம் பிரிவு 133 (1)-ன் கீழ் பள்ளி தாளாளருக்கு உத்தரவு பிறப்பித்தார். உத்தரவு விபரம்: சிதம்பரம் வேங்கான்தெரு வார்டு-3, பிளாக்-4, T.S.No.216-nd 0.0617 ச.மீ (6641 ச.அடி) பரப்பளவில் திருப்பாற்கடல் குளம் அமைந்துள்ளது. வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நகர அளவர் ஆகியோர் மூலம் புலத்தணிக்கை செய்து அறிக்கை பெறப்பட்டது. மேற்படி இடம் 6641 ச.அடி பரப்பளவில் திருப்பாற்கடல் குளம் உள்ளது. இதில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் 3 ஆயிரம் சதுரஅடி ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் ஷீட் கொட்டகை போட்டு ஆக்கிரமித்துள்ளது. எனவே மேற்படி இடம் நீர்வழி புறம்போக்கு என்பதால், இந்த இடம் பொதுமக்கள் நலன் கருதி பொதுநன்மைக்காக பயன்படுத்தக்கூடியது. மேற்படி ஆக்கிரமிப்பு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே திருப்பாற்கடல் குளம் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள சிமெண்ட் ஷீட் கொட்டகையை பிப்.26-ம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு உரிய அவகாசம் அளித்தும், உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படாததாலும், நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு உள்ளதாலும் இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் 138 (2)-ன் கீழ் திருப்பாற்கடல் ஆக்கிரமிப்பினை அகற்ற இறுதி ஆணையை உதவிஆட்சியர் மார்ச் 1-ம் தேதி பிறப்பித்தார். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி, டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் மார்ச்.2-ம் தேதி திருப்பாற்கடல் குளத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த தனியார் பள்ளி தகர ஷீட்டால் அமைக்கப்பட்ட கொட்டகை மற்றும் தடுப்புச்சுவர்களை அகற்றினர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தை இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் தூர்வாரும் பணியை தொடங்கி நடத்தி வருகிறார். தூர்வாரும் போது தனியார் பள்ளியில் நுழைவுவாயில் கேட்அருகே குளத்தின் படிகள் தெரிய தொடங்கியதால், ஆலய பாதுகாப்புக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். விரைவில் குளம் முழுவதும் தூர்வாரப்பட்டு நீர்விடப்படும் என ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.