முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வருத்தமளிக்கிறது: குணங்குடி ஹனிபா

மக்களவைத் தேர்தலை நடத்தியதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வருத்தம் அளிக்கும் வகையிலேயே உள்ளது என்றார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைத் தலைவர் குணங்குடி ஹனிபா.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

மக்களவைத் தேர்தலை நடத்தியதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வருத்தம் அளிக்கும் வகையிலேயே உள்ளது என்றார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைத் தலைவர் குணங்குடி ஹனிபா.திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை குணங்குடி ஹனிபா மேலும் கூறியதாவது:

ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு இடங்களிலும் பிரசாரம் மேற்கொண்டனர். 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றிபெறும். மே 5-ம் தேதி வணிகர் தின விழா கொண்டாடப்படுகிறது. வணிகர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு கூடாது என்பதில் த.மு.மு.க. எப்போதும் உறுதியாகச் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அனைத்து சமூகத்தினரையும் விடுவிக்க, அமைச்சரவையை கூட்டி, ஆளுநர் உதவியுடன் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்களை சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உள்ளிட்டவை மூலம் ஆளுங்கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் துணை போய் உள்ளது. இது வருத்தமளிக்கும் செயலாகும். இனிவரும் காலங்களில் தேர்தலை நேர்மையாக நடத்தும் வகையில், தலைமை தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றத்தின் கீழும், மாநில தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்றத்தின் கீழும் செயல்படச் செய்ய வேண்டும்.

மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்துவதைக் கைவிட வேண்டும். இல்லையெனில் உயர்நிலை, பொதுக்குழுக் கூட்டங்களில் விவாதித்து போராட்டம் நடத்தப்படும். த.மு.மு.க.வில் இருந்து யார் விலகினாலும், பாதிப்பு கிடையாது. இந்த அமைப்பு தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றார் அவர்.

பேட்டியின்போது திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர் மில்லத் இஸ்மாயில், ஏர்வாடி ஷாஜகான், மேலப்பாளையம் வாஹீது, நகரத் தலைவர் மீரான், சுல்தான், செய்யது, கில்மி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →