சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு ரூ.1 கோடி செலவில் புதிய தேர்: கட்டுமானப்பணி தொடக்கம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் ஸ்ரீநடராஜர் தேர் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர்கள் பழுதுற்றது. இதனால் கடந்த 2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசனத்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீநடராஜப் பெருமான் தேர் பழுதுற்றதால், பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் ரூ 1 கோடி செலவில் புதிய தேர் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் ஸ்ரீநடராஜர் தேர் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர்கள் பழுதுற்றது. இதனால் கடந்த 2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவின் போது தேர்கள் வீதிகளில் நிற்காமல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆனித்திருமஞ்சன தரிசனத்திற்குள் தேர்களை சீரமைப்பது குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தேர்களையும், ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த தேர்கள் புதுப்பிக்க வாங்கப்பட்ட மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.
கோயில் பொதுதீட்சிதர்களின் முயற்சியால் காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிற்பிகளை வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பணியாற்றி ரூ.75 லட்சம் செலவில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர் சீரமைத்து கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் ஆனித்திருமஞ்சன தேர் திருவிழாவின் போது ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்மன் புதிய தேர் பொது தீட்சிதர்களால் வெள்ளோட்டம் விடப்பட்டது. ஸ்ரீநடராஜப் பெருமான் தேர் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு ஆனித்திருமஞ்சன திருவிழாவின் போது இயக்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீநடராஜப் பெருமான் தேரை மார்கழி ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பு ரூ 1 கோடி செலவில் சீரமைத்து கட்டுமானப் பணிகளை முடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது ஸ்ரீநடராஜப் பெருமான் தேர் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு, தேரில் உள்ள சிற்பங்கள் அகற்றி எடுக்கப்பட்டு கட்டுமானப் பணியினை தேர்கட்டுமானப் பணி தொழிலாளர்கள் தொடங்கியுள்ளனர். தேர் கட்டுமானப்பணியில் திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி சிவனேசன் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதர் தெரிவித்தார்.