ஆசிரியர்கள் இடமாற்றம்: சிதம்பரத்தில் அரசு பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்கள்
சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில மாதங்களாக மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் நான்கு ஆசிரியர் பணி
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரு ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில மாதங்களாக மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் நான்கு ஆசிரியர் பணி இடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. மேலும் கடந்த இருதினங்களுக்கு முன்பு கலந்தாய்வு மூலம் மேலும் இரு ஆசிரியர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த மாணவர்கள் ஏற்கனவே நான்கு ஆசிரியர்கள் இல்லாமல் படிக்கமுடியாமல் அவதி அடைந்து வருகிறோம். மேலும் இரு ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை ஏற்க முடியாது. எனவே அவர்களுக்கு பதில் வேறு ஆசிரியர்களை நியமனம் செய்து விட்டு பணி மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து அனைத்து மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி நுழைவுவாயில் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுனில்குமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் கோரிக்கை ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.