முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே வன்னியர் சங்க தலைவர் வெட்டிக்கொலை: அதிமுக மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம் அருகே வன்னியர் சங்கத் தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த நண்பர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வன்னியர் சங்கத் தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த நண்பர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீஸார் அதிமுக மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள வேளங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை ஒன்றிய வன்னியர் சங்கத் தலைவராக இருப்பவர் இளம்பரிதி (35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கத்திற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் திருவிழாவில் கணக்கு கேட்டதில் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பரிதி (35) மற்றும் அவரது நண்பர் பழனி (38) ஆகிய இருவரும் ஒப்பந்தப் பணிகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வேளங்கிப்பட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேளங்கிப்பட்டு அருகே ஒரு கும்பல் இருவரையும் வழிமறித்து அரிவாள் மற்றும் கழி, கம்புகளால் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே வன்னியர் சங்கத் தலைவர் இளம்பரிதி இறந்தார். படுகாயமுற்ற பழனி கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார், வேளங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், சகாதேவன், முகுந்தன், பாலமுருகன், சுப்பிரமணியன், தட்சிணாமூர்த்தி, திருஞானம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

வன்னியர் சங்கத் தலைவர் கொலை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பதற்றநிலை நிலவுகிறது. இதனையடுத்து அக்கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.