முகப்பு
தற்போதைய செய்திகள்

பாஜக மீது சிறுபான்மையின மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை: ப.சிதம்பரம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். அவர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சி மீது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. அச்சத்தில் உள்ளனர் என முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:

பாஜக தேர்தலில் 31 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. ஆனால் அதற்கு எதிராக 69 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன. பாஜக சார்பில் வெற்றி பெற்ற 282 பேரில், ஒருவர் கூட முஸ்லீம் கிடையாது. இதில் 68 பேர் முன்னாள் காங்கிரஸ் கட்சியினர். தெற்கு, கிழக்கு மாநிலங்களில் பாஜக போதிய வாக்குகள் பெறவில்லை. பாஜக வலிமையாக உள்ள மாநிலங்களில்தான் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் பாஜக வெற்றி பெறவில்லை. பாஜகவின் நிலைமையை புரிந்து கொண்டு பீகாரில் நிதிஷ்குமார், லாலு, காங்கிரஸ் மூன்றும் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்றுள்ளனர். உத்தரகாண்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இதனையே மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் பாஜக வை முறியடிக்கலாம். ரயில்கட்டண உயர்வு முரட்டுத்தனமானது. இதனால் பொருளாதார பின்னடைவு ஏற்படும். நான் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தங்கம் இறக்குமதிக்கு கட்டுபாட்டு விதித்தேன். 2013-14-ல் 4.5 சதவீதம் பணவீக்கம் இருந்தது. தற்போது 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. நான் விதைத்தது, இன்று கனியாகி உள்ளது. நாங்கள் சென்ற போது ஏறுமுகமாக பொருளாதாரத்தை விட்டுச் சென்றோம். அது பாஜகவிற்கு வசதியாக உள்ளது.

சரியான அமைப்பு இல்லாததே காங்கிரஸ் கட்சியின் பலவீனம்: ஒரு கட்சியின் தலைமையை மாற்றுவதாலோ அல்லது தலைவரை மாற்றுவதாலோ பெரிய மாற்றம் நிகழ்ந்து விடாது. காங்கிரஸ் கட்சியின் பலவீனம் என்பது முறையான அமைப்பு இல்லை என்பதுதான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாநில காங்கிரஸ் கமிட்டி உள்ளது. சில இடங்களில் செயல்படுகிறது, சில இடங்களில் செயல்படவில்லை. இந்தியா முழுவதும் 650 மாவட்டங்கள் உள்ளன. இந்த அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கமிட்டி உல்லை. தமிழகத்தில் கூட 5 மாவட்டங்களில் காங்கிரஸ் கமிட்டி கிடையாது. இதுபோன்று இந்தியா முழுவதும் பல மாவட்டங்களில் காங்கிரஸ் கமிட்டி நியமிக்கப்படாமல் உள்ளது.

ஒன்றியங்களின் கீழ் கிராம காங்கிரஸ் கமிட்டி இருந்தது. தற்போது கிராம காங்கிரஸ் கமிட்டி என்ற அமைப்பே இல்லாமல் போனது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் பலவீனம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். 40 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் கட்சியில் இருந்தாலும், மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தேட வேண்டிய நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் காங்கிரஸிற்கு 13 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்கள் ஆனார்கள். ஆனால் 2 ஆண்டுகள் கழித்து உறுப்பினர் நீட்டிக்கட்டப்பட்ட போது இரண்டு லட்சம் இளைஞர்களே உறுப்பினர்களாக தொடருவது தெரிய வந்துள்ளது. இளைஞர்களை நம்மால் ஈர்க்க முடியவில்லை. எனவே தற்போது கட்சியை பலப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் கிராம காங்கிரஸ் கமிட்டியை உருவாக்குங்கள். சிவகங்கை மாவட்டத்தில் அந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்பிக்கள் கே.எஸ்.அழகிரி, டாக்டர் ப.வள்ளல்பெருமான் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். கூட்டத்தில் கட்சி மாநில நிர்வாகிகள் கோபண்ணா, சுந்தரம்,, குமார், துரை.பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.