பழனி மலைக்கோயிலில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப்பணி
பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6ம் தேதியை முன்னிட்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களின் இரயில் நிலையங்களிலும், கோயில்களிலும்
பழனி மலைக்கோயிலில் வரும் டிச.6ம் தேகி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6ம் தேதியை முன்னிட்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களின் இரயில் நிலையங்களிலும், கோயில்களிலும் காவல்துறை சார்பில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது தமிழகத்தில் வருவாயில் முதலிடம் வகிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பழனி மலைக்கோயிலின் படிவழிப்பாதை, ரோப்கார், வின்ச் நிலையங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்கள் வரும் பாதையில் உள்ள டோர்பிரேம் டிடெக்டர் வழியாக பக்தர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகளை திருக்கோயில் பாதுகாப்பாளர்கள், போலீஸாரால் மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதிக்கப்பட்டு பின்னரே மேலே செல்ல அனுமதிக்கப்படுகிறது. மலைக்கோயிலில் இராஜகோபுரம், தங்க கோபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயுதமேந்திய போலீசாரும், திருக்கோயில் பாதுகாவலர்களும் கூடுதல் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பழனிக் கோயில் தவிர பேருந்து நிலையம், ரயில்நிலையம், அடிவாரம் கிரிவீதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் போலீசார் சாதாரண உடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மலைக்கோயிலில் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு போலீஸார் தவிர திருக்கோயில் அலுவலர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவற்றின் மூலம் பக்தர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவித்ததாவது, டிசம்பர் 6ஐ முன்னிட்டு சுமார் ஐம்பது போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது ஐய்யப்ப பக்தர்கள் சீசன், தைப்பூசம் வரவுள்ளதால் இந்த போலீஸார் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.