முகப்பு
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: திருச்சியில் தனியார் பேருந்துகள் இயங்கின

ஊதிய உயர்வு,பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை

Updated On : 28 டிசம்பர், 2014 at 8:28 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:17 PM

ஊதிய உயர்வு,பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 75 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 11-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு 30.8.2013-ல் முடிவடைந்தது. இதையடுத்து 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது.

இதையடுத்து 12-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும், பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 29-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அண்ணா தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் அறிவித்திருந்தனர்.

Advertisement

இதைதொடர்ந்து தமிழக அரசு சென்னையில் கடந்த 26, 27-ஆம் தேதி தொழிற்சங்க நிர்வாகிகளிடம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்பாக, ஞாயிற்றுக்கிழமை அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கியது.

திருச்சியில் 75 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை. அண்ணா தொழிற் சங்க ஓட்டுநர்கள் மட்டுமே பேருந்துகளை இயங்கினார்கள். மற்ற தொழிற்சங்க ஓட்டுநர்கள் பணிமனையி்ல் எடுத்துச்சென்ற பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

தீரன் நகர், மலைக்கோட்டை,கன்டோன்மென்ட்,டி.வி.எஸ். டோல்கேட், துவாக்குடி,லால்குடி உள்ளிட்ட 18 பணிமனைகள் முன்பு தொமுச, சிஐடியு, ஏஐசிடியு, பாரதீய மஸ்தூர் சங்கம், தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் அறிவிக்கப்பட்ட தேதி முன்னதாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதினால், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். எனினும் மாநகரப் பகுதி பொருத்தவரை தனியார் பேருந்துகள்,ஷேர் ஆட்டோ உள்ளிட்டவைகள் இயங்கியதால் நகர பகுதி மக்களுக்கு பாதிப்பில்லை.

திருச்சி மாநகரப் பகுதியில் 250 பேருந்துகளுக்கு 25 பேருந்துகளும், புறநகரில் 350-க்கு 75 பேருந்துகளும், இதே போல் லால்குடியில் 100 -க்கு 5 பேருந்துகளும், துறையூரில் 100-க்கு 90 பேருந்துகளும், மணப்பாறையில் 100-க்கு 25 பேருந்துகளும், துவரங்குறிச்சியில் 75-க்கு 10 பேருந்துகளும் இயங்கின. இதில் துறையூரில் மட்டும் 90 சதவீதம் பேருந்துகள் இயங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.