மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத மதச்சார்பற்ற, வகுப்புவாதம் இல்லாத புதியகட்சியை கம்யூனிஸ்ட் தேர்வு செய்யும் - ஜி.ராமகிருஷ்ணன்
மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத மதச்சார்பற்ற, வகுப்புவாதம் இல்லாத புதியகட்சியை கம்யூனிஸ்ட் தேர்வு செய்யும், அதற்காக பாடுபடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத மதச்சார்பற்ற, வகுப்புவாதம் இல்லாத புதியகட்சியை கம்யூனிஸ்ட் தேர்வு செய்யும், அதற்காக பாடுபடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பழனி லலிதா மஹாலில் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏ.,வுமான பழனிவேல் படத்திறப்பு விழாவும், பிரச்சாரக்கூட்டமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இராஜமாணிக்கம், அருள்செல்வன், ஒன்றியக்குழு செயலாளர்கள் கமலக்கண்ணன், ராமசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, மாயவன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவர் அளித்த பேட்டியில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் கடந்தமாதம் நடைபெற்ற மத்தியக்குழு கூட்டத்தில் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை பிரச்சார இயக்கத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் துண்டுப்பிரச்சாரம் வழங்குதல், தெருமுனைக்கூட்டம், பொதுக்கூட்டம் நடத்துதல் என நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி பழனியில் சனிக்கிழமை பிரச்சாரக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 22 ஆண்டுகாலமாக மத்தியில் காங்கிரஸ், பிஜேபி என இருகட்சிகளும் அடித்தட்டு மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. 2005ம் ஆண்டு பிஜேபி முன்மொழிந்ததை 2012ல் காங்கிரஸ் செய்கிறது. காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட தாராளமயமாக்கல், பொதுத்துறைகள் தனியார் மயமாக்கல் போன்ற கொள்கையை கம்யூனிஸ்ட் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சில்லரை வணிகத்தில் வெளிநாட்டுக் கம்பெனிகள் வருகையில் கோடிக்கணக்கான சில்லரை வியாபாரிகள் பாதிப்படைவர்.
அதே போல உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் மாநில அரசுகள் இழப்பை சரிசெய்ய பலகோடி செலவிட வேண்டி உள்ளது. சர்க்கரையில் லெவி சர்க்கரை வழங்கவேண்டியதில்லை, கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் கம்பெனி எண்ணெய் எடுக்க விலை உயர்த்தி தருதல் உள்ளிட்ட பல செயல்களும் முதலாளிகளுக்கு பெரியகட்சிகள் உதவுகிறதே தவிர, ஏழை மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கண்டுகொள்வதில்லை. பெட்ரோல், நிலக்கரி, இரும்புதாது, அலைக்கற்றை என பலவற்றிலும் கனிமவளக்கொள்ளை அதிகரித்து வருகிறது.
இதை எதிர்த்து மாற்று பொருளாதாரக்கொள்ளை ஏற்படுத்த கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ், பாஜக கட்சிக்கு மாற்றாக வகுப்புவாதம், பிரிவினை வாதத்துக்கு எதிரான கட்சியை தேர்வு செய்ய கம்யூனிஸ்ட் தயாராகி விட்டது.
இதற்காக அசாமில் அசாம் கனபரிஷத், தமிழ்நாட்டில் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக்கழகம், பார்வர்டு பிளாக், ஒரிஸ்ஸாவில் நவீன்பட்நாயக் தலைமையிலான கட்சி, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகளுடன் புதிய அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலை வறட்சி மாவட்டமாக அறிவித்து அதற்கான நிவாரணங்களை அரசு வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.