முகப்பு
தற்போதைய செய்திகள்

இரும்புத் தாது வெட்டி எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் :மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு

திருவண்ணாமலை அருகே மலையைக் குடைந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதால் பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெள்ளிக்கிழமை மத்திய சுற்றுச்சூழல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:

திருவண்ணாமலை அருகே மலையைக் குடைந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதால் பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெள்ளிக்கிழமை மத்திய சுற்றுச்சூழல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் உள்ளது கவுசி மலைப் பகுதி. இந்த மலையில் இரும்புத் தாது இருப்பது 15 ஆண்டுகளுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, அன்றிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் இங்குள்ள இரும்புத் தாதுவை வெட்டி எடுக்க மத்திய-மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டு வந்தன.
பொதுமக்கள் எதிர்ப்பு:
தகவலறிந்த பொதுமக்கள் இப் பகுதியில் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்பட்டால் கவுசி மலையைச் சுற்றியுள்ள வேடியப்பனூர், வெங்காய வேலூர், ஆடையூர், முனியந்தாங்கல், இனாம்காரியந்தல் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுற்றுச் சூழலும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இரும்புத் தாது வெட்டி எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பல லட்சம் மரங்கள் வெட்டப்படும்:
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜின்டால் என்ற தனியார் நிறுவனம் இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்கான அனுமதி கேட்டு மீண்டும் விண்ணப்பம் செய்தது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பட்சத்தில் மலையில் உள்ள பல லட்சம் அரிய வகை மரங்கள், செடிகள் வெட்டப்படும். எனவே, அனுமதி வழங்கக் கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
மேல் முறையீடு:
இதற்கிடையே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுசி மலையில் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் ஜின்டால் நிறுவனம் இணைந்து இரும்புத் தாது வெட்டி எடுக்க முடிவு செய்தது. மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மத்திய-மாநில சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றி இரும்புத் தாது வெட்டி எடுக்கப்படும். அதிக ஒலி எழுப்பாத இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும், இரும்புத் தாது வெட்டி எடுக்க மலையில் 23 ஹெக்டேர் அளவுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோட்டில் ஜின்டால் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
குழு அமைப்பு:
இதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தனிக்குழு அமைத்து இக் குழுவினர் கவுசி மலையில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. எனவே, மத்திய சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஜெயகிருஷ்ணா, கூடுதல் முதன்மை வனத்துறைத் தலைவர் சமன் சின்ஹா, வேலூர் மண்டல வனப் பாதுகாவலர் கல்யாணசுந்தரம், திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர்கள் சிவசங்கர், ராஜேந்திரன், கோட்டாட்சியர் முத்துக்குமாரசாமி, வட்டாட்சியர் வேடியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) கவுசி மலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு, இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்காக அளவீடு செய்யப்பட்டுள்ள 20 ஹெக்டேர் இடத்தை அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. இப் பகுதியில் இரும்புத் தாது வெட்டி எடுப்பதால் பொதுமக்களுக்கும், விவசாயத்துக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்று மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு செய்துவிட்டுச் சென்றது. இக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.