விலையில்லா பொருள்கள் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்திய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவர் மீது புகார்
சிதம்பரம் அருகே விலையில்லா பொருள்கள் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தி தலைமறைவான அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவர் மீது அண்ணாலைநகர் காவல் நிலையத்தில் புகார்
சிதம்பரம் அருகே விலையில்லா பொருள்கள் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தி தலைமறைவான அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவர் மீது அண்ணாலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடி ஊராட்சியில் கடந்த இரண்டு தினங்களாக தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்டவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை கடந்த ஜன.3ந் தேதி தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சி.கொத்தங்குடி ஊராட்சியில் வசிக்கும் அதிமுக கட்சியை சேர்ந்த அமைப்பு சாரா ஓட்டுனர் சங்க மாவட்டச் செயலாளர் தேவநாதன்(42), அதே பகுதியில் வசிக்கும் திருமலைக்குமார்(35), மீதிகுடி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்(50) ஆகிய மூவரும் சி.கொத்தங்குடி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அலுவலகத்தில் இருந்த ஊராட்சி செயலாளர் மோகனிடம் ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத மூன்று ரேஷன் கார்டுகளை கொடுத்து இதற்கு மிக்ஸி, கிரைண்டர் வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் கேளுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூவரும் மோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, மின்விசிறி, தமிழக முதல்வர் படம், முன்னாள் முதல்வர் அண்ணா படம் மற்றும் தேசத் தலைவர்கள் படங்களை அடித்து உடைத்து, ஊராட்சி செயலாளரையும் தாக்கிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மோகன் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. தாக்கப்பட்டு சேதமுற்ற பஞ்சாயத்து அலுவலகத்தை ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டு உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.