திருச்சி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் இன்று ரகளையில் ஈடுபட்ட 14 திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மேயர் அறிவித்தார். மேலும், தொடர்ந்து அடுத்த கூட்டத்துக்கு 3 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை மாமன்றக் கூட்டம் தொடங்கியதும் மீனவர் பிரச்னைக்கு முதல்வர் ஜெயலலிதா கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று அதிமுகவினர் பாராட்டினர். இதை அடுத்து திமுக கவுன்சிலர்களும் கருணாநிதி இதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்தார் என்றார்கள். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாமன்றத்தில் நீங்களும் இப்படிப் பேசமாலா என்று இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இதனிடையே மேயர் ஜெயா அவையில் கூச்சல் குழப்பம் இருந்ததால் அவையில் இருந்து வெளியேறினார். மேயர் இருக்கையை விட்டு எழுந்து போனவுடன் திமுகவினர் மேயரைக் காணவில்லை என்று அவைக்கு நடுவே வந்து முழக்கமிட்டனர்.
பின்னர் மேயர் உள்ளே வந்தார். பிறகு கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் பத்து நிமிடங்கள் கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு வெளியேறினேன் என்று விளக்கம் அளித்தார்.
ஆனால், மேயர் சொன்னது எங்களுக்குக் கேட்கவில்லை என்று கூறி திமுகவினர் முழக்கமிட்டனர். தொடர்ந்து திமுகவினர் அனைவரும் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டதால், அவர்களை வெளியேற்றச் சொல்லி மேயர் உத்தரவிட்டார். அவர்களை இந்தக் கூட்டத்தில் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் சொல்ல, அவர்களை வெளியேற்ற காவலர்கள் வந்தனர். அப்போது, திமுகவினர் தங்கள் தரப்பு விளக்கத்தைச் சொல்ல மைக் போடுமாறு கூறினார்கள். ஆனால் அது வேலை செய்யவில்லை. உடனே வேலை செய்யாத மைக் எதுக்கு என்று அவற்றைப் பிடுங்கித் தூர எறிந்தனர். அவ்வாறு மைக்கைப் பிடுங்கியெறிந்த 3 திமுகவினரையும் அடுத்த கூட்டத்துக்கும் சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.