முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை திட்டம்: முதல்வருக்கு நகரமன்ற உறுப்பினர்கள் நன்றி

சிதம்பரம் நகராட்சியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கு ரூ.75 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து சிதம்பரம் நகரமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

சிதம்பரம் நகராட்சியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கு ரூ.75 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து சிதம்பரம் நகரமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிதம்பரம் நகரமன்றக்கூட்டம் அதன் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் (அதிமுக) தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், த.வா.க, மூ.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட உறுப்பினர்கள் புதிய பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். உறுப்பினர்கள் பேசிய விபரம் வருமாறு:

ஜி.செல்வராஜ் (மூமுக)- ரூ.75 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதிஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டம் நிறைவேறினால் பாலமான் ஆற்றில் கழிவுநீர் விடப்படுவது நிறுத்தப்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

ஆ.ரமேஷ் (தமிழக வாழ்வுரிமை கட்சி)- சிதம்பரம் புதிய பாதாள சாக்கடை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி. அதே நேரத்தில் இத்திட்டத்தை காரணம் காட்டி நகராட்சி நிர்வாகம் மக்கள் மீது எந்த வரியையும் சுமத்தக் கூடாது. புதிய இணைப்பிற்கு புதிய வரி விதிப்பு செய்யக்கூடாது. மேலும் பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள கட்டடத்தை புதுப்பித்து கட்டித்தர வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். கோடைக்காலம் வரவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வக்காரமாரி நீர் தேக்கத்தில் உள்ள குளத்தின் மேற்கு கரையை உயர்த்தி அதிகளவு நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ்- 2014-15 ஆண்டிற்கான வரவு- செலவு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. எனவே நகரமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டிற்கு என்னென்ன பணிகள் தேவை என்பதை 3-2-2014 க்குள் தெரிவிக்க வேண்டும்.

பெரு.திருவரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)- சிதம்பரம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் அதிகளவு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் நடைபாதையில் நிற்க முடியவில்லை. அதுபோன்று இலவச கழிப்பறை செயல்பாடின்றி உள்ளது. இதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தலைவர்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பஸ் நிலையத்தில் புதிய இலவச கழிப்பறை கட்டப்படும்.

அப்புசந்திரசேகரன் (திமுக)- சிதம்பரம் மேலவீதி நீர்தேக்க தொட்டி 25 ஆயிரம் மக்கள் பயன்பெறும் அளவில் 3 லட்சத்து 86 ஆயிரம் லிட்டர் நீரை தேக்கி வைக்கும் வகையில் 1915-ம் ஆண்டு திவான் பகதூர் ராமசாமி செட்டியாரால் கட்டப்பட்டது. தற்போது இந்த ஆண்டு நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், ராமசாமி செட்டியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விளம்பர பதாகைகள் வைத்து, நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்.

கூட்டத்தில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், மேலாளர் ராமஜெயம், மின் கண்காணிப்பாளர் ஷேக்மொகைதீன், மீட்டிங் கிளார்க் காதர்கான் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments