குளிர் சாதனப் பெட்டி வெடித்து தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் சாவு
திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் கந்தவேலு(43). இவர், ஆடூர்.கொளப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு,
திருக்கோவிலூர் அருகே குளிர் சாதனப் பெட்டி தீப்பிடித்து வெடித்ததால் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் கந்தவேலு(43). இவர், ஆடூர்.கொளப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, சுகந்தி(35) என்ற மனைவியும், மாலதி(21), அருணா(17), சிந்துஜா(14) ஆகிய மூன்று மகள்களும், பார்வதி(75) என்ற தாயும் உள்ளனர். இதில் அருணா, சென்னையில் தனியார் பள்ளியொன்றில் தங்கி பயின்று வருகிறார்.
திங்கள்கிழமை இரவு கந்தவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணியளவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி (ப்ரிட்ஜ்) திடிரென தீப்பிடித்தது. அதை அணைக்க கந்தவேலு முயற்சி செய்தார். இருந்தும், குளிர்சாதனப் பெட்டி எதிர்பாராமல் வெடித்து சிதறியது.
இதில் கந்தவேலு, சுகந்தி, பார்வதி ஆகிய மூவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மாலதி பலத்த காயமடைந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட சிந்துஜா காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கந்தவேலுக்குச் சொந்தமான கான்கிரீட் வீடும் லேசான அளவுக்கு சேதமடைந்துள்ளது.
தகவலறிந்த மணலூர்பேட்டை காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மாலதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் செவ்வாய்க்கிழமை காலை சம்பவம் நடந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார். இதுபற்றி மணலூர்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.