சிதம்பரத்தில் காலாவதியான பிஸ்கட் சாப்பிட்டு ஒருவர் மருத்துவமனையில் அனுமதி: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரத்தில் காலாவதியான பிஸ்கட் சாப்பிட்டு ஒருவர் வாந்தி, மயக்கமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் கடலூர் மாவட்ட
சிதம்பரத்தில் காலாவதியான பிஸ்கட் சாப்பிட்டு ஒருவர் வாந்தி, மயக்கமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான தனியார் நிறுவன பிஸ்கட்களை பறிமுதல் செய்து ஆய்விற்கு அனுப்பியுள்ளனர்.
சிதம்பரம் அருகே கண்ணங்குடி-பரமேஸ்வரநல்லூர் புறவழிச்சாலையில் சேதுநகரில் செந்தில் என்பவரது மளிகை கடை உள்ளது. இந்த மளிகை கடையில் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் அருகே உள்ள அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்நதபாலன் என்பவர் பிஸ்கட் பாக்கெட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார். சிறுது நேரத்தில் வாந்தி, மயக்கமடைந்து அருகிலேயே கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் சாப்பிட்ட பிஸ்கட் காலாவதியானதால், பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கண்டறிந்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எஸ்.பி.ராஜாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவின்பேரில் ஆய்வாளர் பத்மநாபன் (சிதம்பரம்), மாரிமுத்து (குமராட்சி) ஆகியோர் புதன்கிழமை புறவழிச்சாலையில் உள்ள செந்தில் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மளிகை கடை உரிமையாளர் காலாவதியான தனியார் நிறுவன (Sunfeast) 10 பிஸ்கட் பாக்கெட்டுகளை தான் மொத்தமாக வாங்கிய சிதம்பரம் மேலவீதியில் உள்ள தங்கமணி ஸ்டோர்ஸில் கொடுத்ததாக தெரிவித்தார். அதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் மேலவீதி தங்கமணி ஸ்டோர்ஸ் கடையை ஆய்வு செய்து, காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை ஆய்வுக்கூடத்திற்கு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வறிக்கை வந்தபின்னர் மேற்கண்ட கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.