முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பிஇ படிப்பிற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு: 268 மாணவர்கள் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் பிஇ படிப்பில் சேருவதற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிஇ படிப்பில் சேர 234 மாணவ, மாணவியர்கள், பிஇ

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:01 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் பிஇ படிப்பில் சேருவதற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிஇ படிப்பில் சேர 234 மாணவ, மாணவியர்கள், பிஇ லேட்டரல் என்டரி பிரிவில் சேர 15 பேரும், வெளிமாநிலங்களைச் சேர்ந்த 19 பேரும் உள்பட 268 பேர் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 2545 பேர் விண்ணப்பித்தனர். பின்னர் ஜூலை 10,11 தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வில் 1150 மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை பெற்றனர். இந்நிலையில் பிஇ படிப்பிற்கு 3 ஆயிரம் பேர் அனுமதி சேர்க்கை செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படிப்பில் சேர 2-வது கட்ட அனுமதி சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப விற்பனை ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. விண்ணப்பம் விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி தேதி ஜூலை 25-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

2-வது கட்ட அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரிஹாலில்  ஜூலை 30-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. காலை நடைபெற்ற கலந்தாய்வில் 234 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று அனுமதி சேர்க்கை பெற்றனர். பிஇ லேட்டரல் என்டரி பிரிவில் 15 மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை பெற்றனர். மதியம் நடைபெற்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்விற்கு 116 மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் 19 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். பங்கேற்ற 19 பேரும் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்.

பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷவ்தாஸ்மீனா மாணவ, மாணவியர்களுக்கு அனுமதி சேர்க்கை ஆணையை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர், டி.கிருஸ்துராஜ், பொறியியல் புல முதல்வர் செ.வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.