விருதுநகர் பகுதியில் தார்ச்சாலையை கதிரடிக்கும் களமாக விவசாயிகள் பயன்படுத்துவதால் விபத்து அபாயம் ஏற்படும் நிலையிருப்பதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டப் பகுதியில் ஆமத்தூர், செங்குன்றாபுரம், செவலூர், எரிச்சநத்தம், புதுக்கோட்டை, குமிழங்குளம், சங்கரலிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிணற்றுப்பாசனத்தில் தண்ணீர் வசதியுள்ள விளைநிலங்களில் கம்பு, சோளம், சூரியகாந்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். அதுவும் போதிய மழையில்லாத காரணத்தால் அரைகுறையாக விளைந்த கதிர்களை அறுவடை செய்து வருகின்றனர். இதை கதிர்களில் இருந்து தானியத்தை பிரித்து எடுப்பதற்காக தார்ச்சாலையை கதிரடிக்கும் களமாக பயன்படுத்துகின்றனர்.
விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை, விருதுநகர்-அழகாபுரி சாலை,விருதுநகர்-சிவகாசி உள்ளிட்ட அதிகம் போக்குவரத்துள்ள சாலைகளில் கதிர்களை பரப்பி விடுகின்றனர். பேருந்துகள் சக்கரத்தில் அடிபட்ட பின் தானியத்தை தனியாக பிரித்து எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இக்கதிர்களில் இருந்து பறக்கும் தூசிகள் பேருந்துகளில் ஓட்டுநர், பயணிகளின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற காரணங்களால் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் நிலையிருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுர்கள் ஆகியோர் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அருப்புக்கோட்டை-வத்திராயிருப்பு மார்க்கமாக செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் நாகப்பன் கூறுகையில், விவசாயிகளுக்காக கிராமங்களில் கதிரடிக்கும் களம் அரசால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.அப்படி இருந்தும் விரைவாக வேலையை முடிப்பதற்காக நெடுஞ்சாலைகளை விவசாயிகள் கதிரடிக்கும் களமாக பயன்படுத்துகின்றனனர். இதனால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களின் கண்களில் பறந்து வந்து தூசி விழுகிறது. இதுபோன்ற நேரங்களில் விபத்து அபயாம் உள்ளது. அதிலும், இதே சாலையில் செங்குன்றாபுரம், அழகியநல்லூர், செவலூர் பகுதியில் துளசி,வேப்பங்தளை உள்ளிட்ட மூலிகைககளை சாலையில் உயரமாக பரப்புகின்றனர். இதைக் கடந்து பேருந்து செல்லும் போது இயந்திர பாகத்தில் மூலிகை செடி சிக்கிக் கொள்கிறது. சிலநேரங்களில் துளசி செடி குச்சிகளால் டயர் பஞ்சராகும் நிலைமையும் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.