தற்போதைய செய்திகள்

அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியருக்கு கொலை மிரட்டல்:  காவல்துறை விசாரணை

சேலத்தைச் சேர்ந்த அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து

க. தங்கராஜா

சேலத்தைச் சேர்ந்த அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழக நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருப்பவர் எடப்பாடி கே.பழனிசாமி, இவரது வீடு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ளது. இந்த நிலையில் சேலம் வருவாய் கோட்டாட்சியராக இருக்கும் லீலாவதிக்கு கடந்த 13-ம் தேதி செல்பேசி மூலம் குறுந்தகவல் வந்துள்ளது.அதில், சேலம் மாவட்ட ஆட்சியரை 5 நாள்களுக்குள் கொலை செய்து விடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் வட்டாட்சியர் கண்ணனுக்கு சனிக்கிழமை ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியர் மகரபூஷணம், முதன்மை நீதிபதி ஆகியோரை 3 நாள்களில் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.மிரட்டல் தகவலில் இப்படிக்கு கார்த்திக் என்றும் அதன் அருகில் ஒரு செல்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மாநகர காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டாட்சியர் கண்ணன் புகாரின் பேரில் நகர காவல் ஆய்வாளர் ராஜா வழக்குப் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த மிரட்டல் சம்பவம் குறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையர் ஏ.ஜி. பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குறுந்தகவல் அனுப்பப்பட்ட செல்பேசி எண் குறித்து விசாரணை செய்தனர்.அப்போது, அந்த செல்பேசி எண்ணுக்கு உரியவரான கார்த்திக் சேலம் அருகே உள்ள இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் இரும்பாலை சென்று கார்த்திக்கிடம் விசாரித்தனர். அப்போது அவர், குறுந்தகவலை தான் அனுப்பவில்லை என்றும், தனக்கும் இந்த மிரட்டலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

மேலும், மிரட்டல் வந்த செல்பேசிக்கான சிம்-கார்டு தருமபுரியில் வாங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனிப்படை காவல்துறையினர் தருமபுரி சென்று விசாரித்தனர். அப்போது, தருமபுரி நகரப் பகுதியில் இருந்து வாங்கப்பட்ட புதிய சிம்கார்டு மூலம் சேலம் அதிகாரிகளுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதையடுத்து காவல்துறையினர் சனிக்கிழமை இரவு தருமபுரியில் விடிய விடிய விசாரணை நடத்தினர். புதிய சிம்கார்டு வாங்கிய மர்ம நபர்கள் அதில் இருந்து குறுந்தகவல் அனுப்பிவிட்டு பின்னர் அதைத் தூக்கி எறிந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிரட்டல் சம்பவத்தை அடுத்து சேலம் ஆட்சியர், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT