முகப்பு
தற்போதைய செய்திகள்

விலையில்லா பொருட்கள் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி, மண்டல அலுவலகங்கள் முற்றுகை

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக விலையில்லாப் பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பொதுமக்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம், மேலப்பாளையம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக விலையில்லாப் பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பொதுமக்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம், மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தங்கள் பகுதிக்கும் விலையில்லா பொருட்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சில தினங்களுக்கு முன்பு மேலப்பாளையம், குறிச்சி பகுதியில் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக மாநகராட்சி 30 ஆவது வார்டில் டொக்கன் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு புதன்கிழமை விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என கிடைத்த தகவலை அடுத்து சுமார் 3 ஆயிரம் பேர் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் திரண்டனர்.எனினும் விலையில்லா பொருட்கள் முழுமையாக வராத காரணத்தால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை. இதையடுத்து அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி கோட்டாட்சியர் க. சீனிவாசன், வட்டாட்சியர் சொர்ணகோமதிநாயம், தனி வட்டாட்சியர் தேவிகா மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விலையில்லா பொருட்கள் முழுமையாக வரப்பெற்றதும் பயனாளிகளுக்கு நேரடியாக வீடுகளில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். மாநகராட்சி அலுவலகம் முற்றுகை: இதனிடையே மாநகராட்சி 28 வது வார்டு வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற விலையில்லா பொருட்கள் வழங்க வேண்டும்.

குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும். மேலும் பாளையங்கால்வாயில் படித்துறை, கால்வாய் செல்லும் பாதை சீரமைக்க வேண்டும். சுடுகாடுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →