பெண் கருக்கொலையை ஒழிக்க சிறப்புத்திட்டம்: அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் வெளியிட கோரிக்கை
பெண் கருக்கொலையை ஒழிக்க சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்படும் என அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட சிதம்பரத்தில் நடைபெற்ற இளங்குழந்தை உரிமைக்கான
பெண் கருக்கொலையை ஒழிக்க சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்படும் என அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட சிதம்பரத்தில் நடைபெற்ற இளங்குழந்தை உரிமைக்கான பரப்புரைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தமிழ்நாடு ஃபோர்ஸஸ் குழந்தைகள் நல சேவை அமைப்பு சார்பில் இளங்குழந்தை உரிமைக்கான பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவன வளாகத்தில் இளங்குழந்தை உரிமைக்கான பரப்புரைக்கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு கிரீடு தொண்டு நிறுவன செயலாளர் முனைவர் வி.நடனசபாபதி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை ஜான் கே.திருநாவுக்கரசு வரவேற்றார். தமிழ்நாடு ஃபோர்ஸஸ் குழந்தை நல சேவை அமைப்பு, அமைப்பாளர் முனைவர் க.சண்முகவேலாயுதம், மனித நேய அறக்கட்டளை செயலாளர் தில்லைசீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரிசோர்ஸ் பவுன்டேஷன் தலைவர் டி.வேளாங்கன்னி, எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவியல் ஆராய்ச்சி மைய கிராமவள திட்டஅலுவலர் ஆர்.இளங்கோவன், குழந்தைகளின் பங்கேற்பு உரிமைக்கான கூட்டமைப்பு அமைப்பாளர் கே.ஜோதி, கருணை விழிகள் சேவை மைய நிதி செயலாளர் எம்.எஸ்.சிவசங்கர், அன்னை தெரசா சமூக சேவை மைய செயலாளர் கோ.எழிலரசி, சீர்காழி கோவி.நாராயணசாமி, எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.அறிவழகன், உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். ரோஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சியாமளாதேவி நன்றி கூறினார். கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டியது கீழ்கண்ட கருத்துகள் குறித்து முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் அறிக்கையில், உழைக்கும் பெண்களின் சுமையை குறைப்பதற்கு, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான பகல் நேர பராமரிப்பு மற்றும் கல்வியை உரிமையாக்க வேண்டும்; இளங்குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளின் நலன் கருதி கல்வி, நலவாழ்வு, ஊட்டச்சத்து, குடிநீர், துப்புரவு, உள்ளாட்சி ஆகிய துறைகளை ஒருமுகப்படுத்தி, ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும்; 2009-ம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை திருத்தி 3 வயதிலிருந்து 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி உரிமையை உறுதி செய்திட வேண்டும்;
பெண் கருக்கொலை ஒழிப்பதற்காக சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்; தேசிய மொத்த உற்பத்தியில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நலனுக்கு 3 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படுகிற பாலியல் வன்கொடுமைகளுக்கு நடைமுறையில் உள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவைகளை சேர்க்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.