முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் வருகை: சிதம்பரம் புறவழிச்சாலையில் சிமெண்டினாலான ஹெலிகாப்டர் தளம் அமைப்பு

சிதம்பரம் நகருக்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மார்ச் 11-ம் தேதி வருகை தருவதை முன்னிட்டு சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் பல லட்சங்கள் செலவில் சிமெண்டினிலான ஹெலிகாப்டர் தளம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

சிதம்பரம் நகருக்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மார்ச் 11-ம் தேதி வருகை தருவதை முன்னிட்டு சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் பல லட்சங்கள் செலவில் சிமெண்டினிலான ஹெலிகாப்டர் தளம் அமைக்க்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து வருகிற மார்ச் 11-ம் தேதி சிதம்பரம் கீழரதவீதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுவார் என கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டது. கீழரதவீதியில் பொதுக்கூட்டத்திற்கான  இடத்தையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் வளாகத்தையும் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர்  கடந்த பிப்.28-ம் தேதி சிதம்பரம் நகருக்கு வருகை தந்து ஆய்வு தேர்வு செய்தனர்.

இந்நிலையில் கீழரதவீதியில் பொதுக்கூட்டம் நடத்த இடம் போதாது என்பதால், சிதம்பரம் அண்ணாகுளம் எதிரே உள்ள புறவழிச்சாலையில், ஸ்ரீபிரம்மராயர்கோயில் எதிரே உள்ள வயல்வெளிப்பகுதியில் பொதுக்கூட்டம் மேடை மற்றும் ஹெலிபேட் அமைக்க முன்னாள் அமைச்சரும், அதிமுக தேர்தல் பொறுப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த மார்ச் 6ம் தேதி வியாழக்கிழமை காலை இடத்தை தேர்வு செய்தார்.

அன்றைய தினமே நிதிஅமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் ஆகியோர் சிதம்பரம் புறவழிச்சாலையில் புதிய பொதுக்கூட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு பொதுக்கூட்டம் மேடை மற்றும் ஹெலிபேட் அமைக்கும் பணியை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில் முதல்வர் வருகைக்காக புறவழிச்சாலையில் பொதுக்கூட்டம் மேடை அமைக்கும் இடத்திற்கு எதிர்புறம் உள்ள வயல்வெளியில் சிமெண்டினால் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தளம் அமைக்கப்பட்டு, அதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.