முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை சிதம்பரத்திற்கு ஜெயலலிதா வருகை: ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு முகாம்

சிதம்பரத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வருகை தருகிறார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:37 AM
பகிர்:

சிதம்பரத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வருகை தருகிறார். சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடை மற்றும் ஹெலிபேட் மிக பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவன் ஆகியோரை ஆதரித்து சிதம்பரம் அருகே பழைய புவனகிரி ரோட்டில் உள்ள புறவழிச்சாலையில் ஸ்ரீபிரம்மராயர்கோயில் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடையில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நாளை (மார்ச் 11) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் வயல்வெளியை சீரமைத்து வடக்கு நோக்கி பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு எதிர்புறத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு சிமெண்டினாலான ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை மற்றும் ஹெலிபேட் ஆகியவற்றிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் மேடை மற்றும் ஹெலிபேட் அமைக்கும் பணியை  நிதிஅமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி ஆகியோர் திங்கள்கிழமை அப்பகுதியில் முகாமிட்டு பொதுக்கூட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்களுடன் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஏ.அருண்மொழித்தேவன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர்கள்  செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:  முதல்வர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஐஜி ரவி, உளவுத்துறை ஐஜி கண்ணப்பன், வடக்கு மண்டல டிஐஜி மஞ்சுநாத், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு எஸ்பி முருகேசன், ஏடிஎஸ்பி ராஜராஜன், கடலூர் மாவட்ட எஸ்பி ராதிகா உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்பிக்கள் திங்கள்கிழமை சிதம்பரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இவையல்லாமல் ஆயிரக்கனக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலூரிலிருந்து மோப்ப நாய்கள் சிம்பா, ஜாக்  மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், ஹெலிபேட் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டம், கூட்டமாக சென்று வேடிக்கை பார்க்கும் மக்கள்: சிதம்பரம் நகரில் முதல் முறையாக பிரமாண்டமான முறையில் நகரின் வெளிப்புறத்தில் மாநாடு போன்று பொதுக்கூட்ட மேடை அமைப்பது, ஹெலிபேட் அமைப்பதும் இதுவே முதல்முறையாகும். எனவே இதனை கேள்விப்பட்ட சிதம்பரம் நகர மக்கள் திங்கள்கிழமை கூட்டம், கூட்டமாக புறவழிச்சாலைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதா பேசுவுள்ள பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை மற்றும் ஹெலிபேடையும் பார்த்து வந்த வன்னம் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.