முகப்பு
தற்போதைய செய்திகள்

குளறுபடியான தேர்வு முடிவு விசாரணை கோரி அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள குளறுபடியான தேர்வு முடிவு குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள குளறுபடியான தேர்வு முடிவு குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக் கல்லூரிகளில் பயின்று தேர்வு எழுதிய மாணவ-மாணவியர்களின் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

இதில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, இடைநின்ற மாணவர் தேர்ச்சி பெற்றதாகவும், நன்றாக தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாகவும், தேர்வு எழுதாத பலரின் பெயர்கள் தேர்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், தகுதி இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு விடைத்தாள்கள் திருத்தப்பட்டதால் நன்றாக தேர்வு எழுதிய பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இதுபோன்ற குளறுபடியைக் கண்டித்தும், குளறுபடிக்கு காரணம் யார் என்பதை உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கக் கோரியும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் நடைபெறவேண்டிய முதல் ஷிப்ட் வகுப்புக்கு வந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, குளறுபடிக்குக் காரணம் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல், இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து வந்த போலீஸார் மாணவ-மாணவியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாணவ-மாணவியர் அனைவரும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.