விருதுநகர் அருகே அனுமதியின்றி காட்டுப்பகுதியில் செட் அமைத்து பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை தயாப்பில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர். அதோடு, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர் அருகே ஒன்டிப்புலிநாயக்கனூரில் காட்டுப்பகுதியில் அரசு அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக செட் அமைத்து பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்கள் தாயர் செய்து வருவதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை மாலையில் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காட்டுப்பகுதியில் செட்டில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கருந்திரிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதில், தொழிலாளர்கள் போலீஸார் வருவதைப் பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். பின்னர் அவர்களை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். அதோடு, அங்கு தயாரித்து வைத்திருந்த கருந்திரி கட்டுக்களையும், அருகில் அறைகளில் வைக்கப்பட்டிருந்த வெடியுப்பு, கரிமருந்து மூடை உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான வெடிபொருள்களையும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அங்கு கரிமருந்து திரிகட்டுக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், அமாவசை, காளிராஜ், ஜெயக்குமார், ஜெயராஜ், சுப்பிரமணியம், மாரியப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதோடு இந்த கரிமருந்து திரிகளை தயாரிக்கும் செட்டை நடத்தி வந்த சங்கரலிங்காபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.