சிதம்பரம் பாமக வேட்பாளர் மாற்றம்: புதிய வேட்பாளராக தொழிலதிபர் கே.ஐ.மணிரத்தினம் அறிவிக்கப்படுகிறார்
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கி.கோபாலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்படுகிறார். புதிய வேட்பாளராக தொழிலதிபர் கே.ஐ.மணிரத்தினம்
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கி.கோபாலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்படுகிறார். புதிய வேட்பாளராக தொழிலதிபர் கே.ஐ.மணிரத்தினம் அறிவிக்கப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தைச் சேர்ந்த கி.கோபாலகிருஷ்ணன் பாட்டாளி மக்கள் கட்சி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருமாவளவன், வள்ளல்பெருமான் ஆகியோர் போட்டியிடுவதால், வேறு வேட்பாளரை மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ஆலோசனை செய்து வந்தார். இதனால் சிதம்பரத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி பாமக வேட்பாளரை ஆதரித்து நடைபெற இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தேர்தல் பிரசாரக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு சீட் கிடைக்காததால், சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம், தனது ஆதரவாளர்களுடன் போராட்ட நடத்தி அதிருப்தியில் இருந்த தொழிலதிபர் கே.ஐ.மணிரத்தினம், பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ.குருவை, அரியலூர் மாவட்ட காடுவெட்டியில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை சந்தித்துள்ளார்.
சந்திப்பிற்கு பின்னர் ஜெ.குரு எம்எவ்ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளர் ஒரிரு தினங்களில் மாற்றம் செய்து அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார். பின்னர் கே.ஐ.மணிரத்தினம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பாமக அதிகாரப்பூர்வ வேட்பாளராக, தொழிலதிபர் கே.ஐ.மணிரத்தினத்தை ஞாயிற்றுக்கிழமை பாமக கட்சி தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பார் எனத் தெரியவருகிறது.