முகப்பு
தற்போதைய செய்திகள்

என்னை தோற்கடிக்கவே மணிரத்தினத்தை வேட்பாளராக அறிவித்துள்ளனர்: டாக்டர் ப.வள்ளல்பெருமான்

என்னை தோற்கடிக்க வேண்டும் என பாஜக, தேமுதிக, பாமக ஆகியோர் சேர்ந்து அரசியல் சூழ்ச்சி செய்து மணிரத்தினத்தை பாமக வேட்பாளராக அறிவித்துள்ளனர் என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

என்னை தோற்கடிக்க வேண்டும் என பாஜக, தேமுதிக, பாமக ஆகியோர் சேர்ந்து அரசியல் சூழ்ச்சி செய்து மணிரத்தினத்தை பாமக வேட்பாளராக அறிவித்துள்ளனர் என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமான் தெரிவித்தார்.

சிதம்பரம் தெற்குவீதி ஏ.ஆர்.மஹாலில் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.புரட்சிமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமான் பேசியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கடல். அது அழிந்து போய்விடாது. கட்சிக்கு துரோகம் செய்ய எந்த ஒரு உண்மையான காங்கிரஸ்காரனும் நினைக்கமாட்டான். எம்பி சீட் வாங்கவே மணிரத்தினம் காங்கிரஸிற்கு வந்தார். சீட் கிடைக்கவில்லை என வேறுகட்சிக்கு போய்விட்டார். பணம் இருந்தால் மட்டும் பதவி வாங்க முடியாது. இந்த தேர்தல் பாஜகவிற்கும், காங்கிரஸிற்கும் இடையேதான போட்டி. திமுகவோ, அதிமுகவிற்கு இடையே அல்ல. 

நான் காங்கிரஸ் கட்சிக்காரன், காங்கிரஸ் கட்சியை வளர்க்க வந்துள்ளேன் எனக்கூறிய மணிரத்தினம் பதவிக்காக வன்னியர் சங்கத்தில், காடுவெட்டி குருவை சந்தித்து சேர்ந்துள்ளார். நான் மூன்று முறை எம்பியாகவும், ஒரு முறை எம்எல்ஏவுமாக பணியாற்றி கட்சி மற்றும் ஜாதி பாகுபாடின்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் சேவை செய்துள்ளேன். எனவே எனக்கு வாய்ப்பு கொடுங்கள். மத்தியில் மதவாத ஆட்சி வரக்கூடாது. மதவாதஆட்சி வந்தால் இந்தியாவின் பெயரையே மாற்றிவிடுவார்கள். அம்பேத்கர் இயற்றிய சட்டம் திருத்தப்படும். எனவே நிலையான ஆட்சி அமைய, ராகுல்காந்தி பிரதமராக வர எனக்கு வாய்ப்பளியுங்கள். என்றும் நன்றி உடையவனாகவும், விசுவாசமாகவும் இருப்பேன் என ப.வள்ளல்பெருமான் தெரிவித்தார்.

கூட்டத்தில் முன்னாள் எம்பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாநில துணைத் தலைவர் எம்.செந்தில்குமார், மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், நகரத் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன், பாரதியார் வங்கி இயக்குநர் துரை.பாலசந்தர், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மூப்பனார் பேரவைத் தலைவர் ஆர்.மக்கீன், பொதுச்செயலாளர் எம்.என்.ராதா, எஸ்சி., எஸ்டி பிரிவுத் தலைவர் டி.கே.எம்.வினோபா, ராஜாசம்பத்குமார், தொழிற்சங்க பிரிவு மாவட்டத் தலைவர் ராஜராஜன், மகளிரணி சந்தானமேரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.