முகப்பு
தற்போதைய செய்திகள்

20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுத்தும் இந்த அரசுக்கு என்ன தண்டனை தரப்போகிறீர்கள்: மு.க.ஸ்டாலின்

கடந்த தேர்தலின் போது 2 மணி நேரம் மின்வெட்டு இருந்த காரணத்தினால் எங்களுக்கு தண்டனை கொடுத்தீர்கள், தற்போது 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுத்தும் இந்த அரசுக்கு என்ன தண்டனை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

கடந்த தேர்தலின் போது 2 மணி நேரம் மின்வெட்டு இருந்த காரணத்தினால் எங்களுக்கு தண்டனை கொடுத்தீர்கள், தற்போது 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுத்தும் இந்த அரசுக்கு என்ன தண்டனை தரப்போகிறீர்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் மக்களவை தொகுதியில்  திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர்.எம்.செந்தில்நாதனுக்கு வாக்குகள் சேகரித்து சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது  ஜெயலலிதா  கொடுத்த வாக்குறுதிகளில் கூறியபடி விலைவாசி, மின்கட்டணம், பேருந்து கட்டணம் எதையும் குறைக்கவில்லை. மக்களுக்கு 20 லிட்டர் இலவச குடிநீர் வழங்குவதாக கூறினார். முதியோருக்கு இலவச  பஸ்பாஸ் வழங்குவதாக கூறியதையும் நிறைவேற்றவில்லை. ஏழைகளுக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரவில்லை, நடமாடும் மருத்துவமனை கொண்டுவருவதாக சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, மாற்று திறனாளிகளுக்கு 3 சதவிதம் இட ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி இதுவரை எந்த வாக்குறுதியையும் ஜெயலலிதா அரசு நிறைவேற்றவில்லை.

கடந்த முறை கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற உடன் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார்.கடந்த தேர்தலின் போது 2 மணி நேரம் மின்வெட்டு இருந்த காரணத்தினால் எங்களுக்கு தண்டனை கொடுத்தீர்கள், தற்போது 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் இந்த அரசுக்கு என்ன தண்டணை தரப்போகிறீர்கள்.ஜெயலலிதா முதலமைச்சர் ஆனவுடன் 3 மாதத்தில் மின்வெட்டு அறவே நீக்கப்படும் என்றார், ஆனால் 3 வருடங்கள் ஆகியும் மின்வெட்டை நீக்க முடியவில்லை.

மின் உற்பத்திக்காக ஜெயலலிதா அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் ஏற்படும் கழிவுகளிலிருந்து 1000 மெகாவால்ட் மின் உற்பத்தி செய்யப்படும் என்ற ஜெயலலிதா இதுவரை ஒரு மெகாவால்ட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா, சு.முத்துசாமி, கோபி நகர திமுக செயலாளர் கோ.வெ.மணிமாறன், மாவட்ட இலக்கிய அணி செயலர் கோ.வெ.குமணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ப.வெங்கிடு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →