பால் விலை உயர்வினை கண்டித்து, திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பால்விலை உயர்வு, உயர்த்தப்பட உள்ள மின் கட்டணம், விலைவாசி உயர்வினை கண்டித்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும் திமுக சார்பில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன்படி திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில், மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு முன் திமுகவினர் மத்தியில் அவர் பேசியதாவது:
மக்களின் நலனுக்காக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி திமுக தான். தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம், கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கடந்த 3 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அதிரடியாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பால் கட்டணமும் உயர்த்தப்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாத ஒரே மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு காரணம், திமுக ஆட்சி காலத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தான்.இலவச வேட்டி, சேலைகள் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.75 கொடுத்து வாங்காமல், கேரளத்திலிருந்து யூனிட்டிற்கு ரூ.16 கொடுத்து மின்சாரம் பெறப்படுகிறது. இதன் மூலம் ஏற்படும் கூடுதல் சுமை, பொதுமக்கள் தலையில் இறக்கப்படுகிறது.தற்போது பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியுள்ள தமிழக அரசு, விரைவில் மின் கட்டணத்தையும் உயர்த்தப்போகிறது. டாஸ்மாக் மதுபானங்களுக்கான விலையை, ஆயிரம் மடங்கு உயர்த்தினாலும் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. அதன் மூலம் மது அருந்துவோரின் எண்ணிக்கையாவது குறையும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், எதிர்கால சந்ததியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்தும், கண்மாய்களுக்கான வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால், தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட, பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன.எதிர்காலத்தில் ஏழை, எளியோரையும், பாமரமக்களையும் பாதுகாக்க திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து, பால்விலை, மின்கட்டணம், விலைவாசி உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.காந்திராஜன், மாநில இளைஞரணி துணைச் செயலர் இ.பெ.செந்தில்குமார், நகரச் செயலர் பஷீர் அகமது, பட்டிமன்ற பேச்சாளர் ஐ.லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.