பழனியில் ஜெயலலிதா முதல்வராக வேண்டி தலைகீழாக தவில் வாசித்து தவில் கலைஞர் சாதனை வேண்டுதல்
பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தவில்கலைஞர் ஒருவர் தலைகீழாக தவில் வாசித்து சென்று சாதனை வேண்டுதல் நிகழ்த்தினார்.
பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தவில்கலைஞர் ஒருவர் தலைகீழாக தவில் வாசித்து சென்று சாதனை வேண்டுதல் நிகழ்த்தினார்.
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பின் போதும், டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பின் போதும் அதிமுகவினர் பிரார்த்தனைகளை செய்து வருவது ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. பழனி அடிவாரம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. நாட்டுப்புற கலைஞரான இவர் தவில் வாசிப்பதில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளார்.
தலைமுடியில் தீப்பந்தத்தை கட்டி அதை சுழற்றியபடியே தவில் வாசிப்பது, தலையில் தீக்கரகம் வைத்தபடி ஆடிக்கொண்டே தவில் வாசிப்பது, பொய்க்காலில் நின்று தவில் வாசித்தபடியே பழனி முதல் திண்டுக்கல் வரை 61 கி.மீ நடந்தே சென்றது, தலைமுடியில் மினிவேனை கட்டி இழுத்தபடியே நடந்து கொண்டு கிரிவீதியில் தவில் வாசிப்பது என பல்வேறு சாதனைகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அருள்மிகு தண்டாயுதபாணியை வேண்டியவாறு கிரேனில் தலைகீழாக தொங்கியபடியே தவில் வாசித்துவாறு சென்று சாதனை வேண்டுதல் நிகழ்த்தியுள்ளார்.
அடிவாரம் அருள்மிகு பாதவினாயகர் கோயிலில் துவங்கிய இந்நிகழ்ச்சியை பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு துவக்கி வைத்தார். முன்னாள் எம்எல்ஏ., சுப்புரத்தினம், நகர துணை செயலாளர் வாய்க்கால்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின் முன்பாக சாதனையாளர் மாரிமுத்துவின் மகள் நளாயினி நாதஸ்வரம் வாசித்து வந்தார். சாதனை நிகழ்ச்சி குறித்து தவில்கலைஞர் மாரிமுத்து தெரிவித்ததாவது,
தமிழகத்தில் உள்ள சுமார் ஆறரை இலட்சம் நாட்டுப்புற கலைஞர்கள் சார்பாக ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி இந்த சாதனை நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன். கர்நாடக சங்கீத வித்வான்கள், ஆஸ்தான கலைஞர்கள் இதை தவறாக நினைக்க வேண்டாம் என தெரிவித்தார்.
மாரிமுத்து தவில் வாசித்து சென்றதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன், மாவட்ட தொழிற்சங்க பேரவை செயலாளர் லோகநாதன், துணை செயலாளர் காளிமுத்து, அம்மா பேரவை ராஜாமுகமது, கவுன்சிலர்கள் நடராஜன், குமரேசன், நாகமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.