ஈரோடு மாவட்டத்தில் ரூ.1, ரூ.2 நாணயங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சிறு வியாபாரிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், நோட்டுப்புத்தக கடைகள், பேக்கரிகள் என சுமார் 1 லட்சம் சிறு வணிக கடைகள் உள்ளன. ஈரோடு நகரில் மட்டும் 20,000 சிறு வணிக கடைகள் இயங்கி வருகின்றன.
தங்களுக்குத் தேவையான சில்லரைகளை வங்கிகளிடம் இருந்து சிறு வணிக வியாபாரிகள் வாங்குவது வழக்கம். இவை தவிர கோயில்கள், காயின்பாக்ஸ்களை வைத்திருப்பவர்கள், பேருந்து நடத்துவர்கள் ஆகியோர்களிடமும் ரூ.100-க்கு ரூ.5 கமிஷன் கொடுத்து ரூ.1, ரூ.2 ரூபாய்களை சிறுவணிகர்கள் வாங்கி வந்தனர்.
ஆனால், கடந்த ஓராண்டாக ஈரோடு மாவட்டத்தில் சில்லரை புழக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் இப்போது கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடைகளில் சில்லரைகளுக்கு பதிலாக சாக்குலேட்கள், விக்ஸ், கால்ஸ் மற்றும் மிட்டாய்களை வழங்கி வருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் தயவு செய்து சில்லரை கொடுத்து வாங்கவும் என அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர். இருப்பினும் ஒரு சில வாடிக்கையாளர்கள் மிட்டாய்களை வாங்க மறுத்துவிடுவதால் கடைகளில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து ஈரோடு அருகே கைகாட்டுவலசு பகுதியில் உள்ள மளிகை கடை உரிமையாளர் ஜெ.சிம்சோன் கூறியது:
செல்போன் பயன்பாடு அதிகமாகிவிட்டதால் காயின் பாக்ஸ்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கோயில்களிலும் சில்லரைகளுக்கு பதில் ரூ.10, ரூ.20 என ரூபாய் நோட்டுகளை தான் காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகின்றனர்.
பயணச்சீட்டுகள் பொதுவாக ரூ.10, ரூ.15, ரூ.20 என முழுத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நடத்துனர்களிடமும் சில்லரைகளுக்கு ஏற்பட்டுள்ளது.தட்டுப்பாடு காரணமாக ரூ.100-க்கு ரூ.7 முதல் ரூ.20 வரை கொடுத்து சில்லரைகளை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்கு இதுபோல கூடுதல் கமிஷன் கொடுத்து சி்ல்லரைகளை வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு சில்லரை தட்டுப்பாட்டை போக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றார்.
இது குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ் கூறியது:ரிசர்வ் வங்கியில் இருந்து சில்லரைகளை வாங்கி விநியோகம் செய்யும் அதிகாரம் ஈரோடு மாவட்டத்தில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வரும் சில்லரைகளை வாடிக்கையாளர்கள் நேரடியாக பெற்றுச்செல்கின்றனர். வணிகர்கள் தாங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளில் சில்லரைகளை கேட்டு வாங்கலாம். இருப்பினும் சில்லரை வழங்கும் முகாம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.