திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாசன பரப்புகளுக்கு பிசான சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பிசான சாகுபடி விவசாயத்திற்காக தமிழக அரசு உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பாபநாசம் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விட்டார். தண்ணீரை திறந்து விட்டு ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் ஆகியவற்றின் மூலம் 21,910 ஏக்கர் பரப்பும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால்வாய், மருதூர் கீழக்கால்வாய், ஸ்ரீவைகுண்டம் அணை தெற்கு பிரதானகால்வாய், வடக்குப் பிரதான கால்வாய் ஆகியவற்றின் மூலம் 13, 506 ஏக்கர் பரப்பும் மொத்தம் 35, 416 ஏக்கர் பாசனப் பரப்புகளுக்கு அக்டோபர் 10ஆம் தேதி முதல் 2015 மார்ச் 31ஆம் தேதி வரை 173 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தண்ணீர் 173 நாட்கள் திறந்துவிடப்படுவதால் சில விவசாயிகள் பயிரிடும் சன்ன ரக அரிசிகளான பொன்னி போன்ற நீண்ட நாட்கள் பயிர்களும் பயன்பெறும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் சேரன்மகாதேவி நட்டார், திருநெல்வேலி சிவக்குமார், ஸ்ரீவைகுண்டம் வேலையா, அம்பாசமுத்திரம் உதவிப் பொறியாளர் மாயன்முருகன், மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பிச்சையா, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் வளர்மதி, கவிதா, அம்பாசமுத்திரம் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன், விக்கிரம சிங்கபுரம் நகராட்சித் தலைவி மனோண்மணி, விவசாயிகள் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாபநாசம் அணையின் நீர் மட்டம் 68.85 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 254 கன அடியாகவும், அணையில் இருந்து 700 கன அடியாகவும் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு முழு அளவில் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையில் பிசான சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வடகிழக்குப் பருவ மழை சரியான காலத்தில் பெய்தால் மட்டுமே இந்த மகிழ்ச்சி முழுமையடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.