வரதட்சணையின் காரணமாகவே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்தும், ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் வரதட்சணை ஒழிப்பு தினம் குறித்த கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த 1961-ம் ஆண்டு வரதட்சணை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் படி வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகும். வசதியானவர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு வரதட்சணையாக நகை, பணம் மற்றும் சீதனப்பொருள்களை ஏராளமாக வழங்குவார்கள். அந்தளவிற்கு ஏழை எளிய மக்களால் பொருள்கள் வழங்க இயலாது. இதுபோன்ற காரணங்களால் மாப்பிள்ளை வீட்டார் பெண்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்துவதிலிருந்து இச்சட்டம் காப்பாற்றுகிறது. மேலும், வரதட்சணையானது நேரடியாக மட்டுமின்றி சீதனம் போன்ற வேறு வகைகளில் வாங்கினாலும் குற்றமாகும்.
சீதனப் பொருள்கள் பெண் வீட்டாரின் விருப்பத்தின் பேரில் தகுதிக்குள்பட்டு கொடுத்தாலும் மணமகன், மணமகள் கையொப்பத்துடன் சீதனப் பொருள்களின் விவரமும் இடம் பெற்றிருக்க வேண்டும். வரதட்சணை என்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வரும் பழக்கமாகும். இதற்காக பெண்கள் துன்புறுத்தப்படுவதால் சில சமயங்களில் மரணங்களும் ஏற்படுகிறது.
இது போன்ற குற்றங்களுக்கு குறைந்தது 7 ஆண்டு தண்டனைகள் வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தும், ஆண்கள் பிறப்பு விகிதம் அதிகரித்தும் வருகிறது. இன்னும் 20 முதல் 25 ஆண்டுகளில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இக்கால கட்டங்களில் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் நிலையும் ஏ்ற்படலாம். எனவே இனி வருங்காலங்களில் வரதட்சணை, சீதனப்பொருள்கள் போன்றவைகள் இல்லாமல் யாரையும் துன்புறுத்தாமல் திருமணமானது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட வேண்டும். பெண்கள் தான் பெற்றவர்களை கடைசி வரையில் வைத்து காப்பாற்றுவார்கள். அதன் அடிப்படையில் பெண் குழந்தைகளை படிக்க வைத்து அறிவு சார்ந்த நாடாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும். நாம் அனைவரும் வரதட்சணை வாங்கக் கூடாது, வரதட்சணை அடியோடு ஒழிக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.
அதற்கு முன்னதாக வரதட்சணை தடுப்பு குறித்து சமூக நலத்துறை மற்றும் சமூகத்தின் பங்கு குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.யுவராணியும், வரதட்சணை தடுப்புச் சட்டம்-1961 ஒரு பார்வை என்ற தலைப்பில் வழக்குரைஞர் எஸ்.உமாசெண்பகவள்ளியும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு-498 ஒரு பார்வை என்ற தலைப்பில் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் என்.புவனேஸ்வரியும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)கொங்கன், கோட்டாட்சியர்கள் மணிவண்ணன்(சிவகாசி), உதயகுமார்(அருப்புக்கோட்டை), கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.சசிகலா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குருசாமி, சைல்டு லைன் மண்டல அலுவலர் எல்.லதா, மருத்துவத்துறை துணை இயக்குநர் சண்முகசுந்தரம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர் நாராயணசாமி, மகளிர் திட்ட உதவி அலுவலர் பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.