பழனி திருஆவினன்குடி கோயிலில் வரும் செப்.7 கும்பாபிஷேகம்: இன்று முதல்கால யாகபூஜை
ஆறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும் பழனி திருஆவினன்குடி கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகப் பணிகள் துவங்கியது. வாயிற்கோபுரத்தில் உள்ள இராஜ கோபுரங்களுக்கு
ஆறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும் பழனி திருஆவினன்குடி கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகப் பணிகள் துவங்கியது. வாயிற்கோபுரத்தில் உள்ள இராஜ கோபுரங்களுக்கு புதிதாக சுதைகள் சீர் செய்யப்பட்டு வர்ணப்பூச்சு, அருள்மிகு சனீஸ்வரர் சன்னதிக்கு புதிய கோபுரம் என அனைத்து கோபுரங்களுக்கும் புதிய வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற செய்யப்பட்டுள்ளது.
கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தில் சுத்தம் செய்யப்பட்டு, வார்னீஷ் பூச்சு செய்யப்பட்டு புதிய சிலைகள் போல காட்சியளிக்கிறது. சுமார் ஒருகோடி மதிப்பீட்டில் துவங்கிய இப்பணிகள் தற்போது நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இதை முன்னிட்டு கடந்த சில தினம் முன்பு முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை வினாயகர்பூஜை, பஞ்சகவ்ய பூஜை நடத்தப்பட்டு பூஜைகள் துவங்கின. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலின் வெளிப்பிரகாரத்தில் பிரமாண்டமான யாகசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு வியாழக்கிழமை(இன்று) முதல் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. இதற்காக அருகேயுள்ள மண்டபத்தில் கனிவகைகள், நூற்றுக்கணக்கான கலசங்கள், திரவியப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் மலைபோல குவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கோபூஜை, அங்குரார்ப்பணம், மூலவர் கலாகர்ஷணம் நடத்தப்பட்டு மாலையில் முதல்கால பூஜை துவங்குகிறது. வெள்ளிக்கிழமை இரண்டாம்கால பூஜையும், மூன்றாம் காலபூஜையும், சனிக்கிழமை நான்காம்கால பூஜையும் நடத்தப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.40 மணியளவில் அருள்மிகு குழந்தைவேலாயுதசாமி, அருள்மிகு வேலீஸ்வரர் விமானம், இராஜகோபுர விமானங்களுக்கு சமகாலங்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பூஜைகளை தவராஜபண்டிதர்(பொறுப்பு) அமிர்தலிங்க குருக்கள், தேவஸ்தான ஸ்தானீகர் செல்வசுப்ரமண்ய குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை மலைக்கோயில் ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் சார்பில் சண்முகநதி, வரட்டாற்றில் இருந்து புனித தீர்த்தம் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் மேளதாளம் முழங்க யானை முன்னேவர கிளம்பிய தீர்த்தப்புறப்பாடு திருஆவினன்குடிக்கு கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார்,திருக்கோயில் பேஷ்கார் நாராயணன், சுகந்தவிலாஸ் மகேஷ், ஸ்தானிக மிராஸ் சங்க தலைவர் கந்தசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் பழனிக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.