முகப்பு
தற்போதைய செய்திகள்

100 நாள் திட்டத்தை முடக்க நினைத்தால் மக்களைத் திரட்டி காங்கிரஸ் போராடும்: ஞானதேசிகன் பேட்டி

காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த 100 நாள் திட்டத்தை பாஜக ஆட்சி முடக்க நினைத்தால், மக்களைத் திரட்டி காங்கிரஸ் போராடும் என்று தமிழ்நாடு

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:50 AM
பகிர்:

காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த 100 நாள் திட்டத்தை பாஜக ஆட்சி முடக்க நினைத்தால், மக்களைத் திரட்டி காங்கிரஸ் போராடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள நகர, வட்டார பொறுப்பாளர்கள் புதிதாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காமராஜர், சத்தியமூர்த்தி ஆகியோருக்கான சிலைகளும், ராஜிவ்காந்தியின் பெயர் பலகையும் நிறுவப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா இம் மாதம் 30-ம் தேதி நடைபெறுகிறது.

இவ் விழாவில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இலங்கை அரசால் பிடிக்கப்படும் தமிழக மீனவர்களையும், தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்தோம்.

இப்போதுள்ள மத்திய பாஜக அரசு தமிழக மீனவர்களை மட்டும் மீட்க காலதாமதாக நடவடிக்கை எடுக்கிறது. மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க பாஜக முயல்வதாக தகவல்கள் பரவுகின்றன. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்ட திட்டம்தான் 100 நாள் வேலைத் திட்டம். அப்படிப்பட்ட திட்டத்தை பாஜக அரசு முடக்க நினைத்தால் மக்களைத் திரட்ட காங்கிரஸ் போராடும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்படும் என்பது தவறான தகவல். உள்ளாட்சி இடைத் தேர்தல் கேலிக்கூத்தான முறையில் நடைபெற்றுள்ளது என்றார்.

பேட்டியின்போது, மாநில துணைத் தலைவர் சி.ஞானசேகரன், சோனியா பேரவை மாநிலச் செயலாளர் இ.கங்காதரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் க.மணிவர்மா, மாவட்ட பொருளாளர் குட்டி அருணாசலம், நகரத் தலைவர் ராயர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.