முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியருகே தனியார் தோட்ட கிணற்றில் மூன்று மலைப்பாம்புகள் பிடிபட்டது

பழனியை அடுத்த தனியார் தோட்ட கிணற்றில் மலைப்பாம்புகள் இருப்பது குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மூன்று பாம்புகளை உயிருடன் மீட்டு

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

பழனியை அடுத்த தனியார் தோட்ட கிணற்றில் மலைப்பாம்புகள் இருப்பது குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மூன்று பாம்புகளை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

பழனியை அடுத்த கொடைக்கானல் மலைச்சாலையில் ஏராளமான தோப்புகள் உள்ளன.  இவற்றில் பாம்புகள் சாதாரணமாக உலா வருவது வழக்கம்.  இந்நிலையில் அய்யனார்கோயில் செல்லும் வழியில் உள்ள தனியார் தோட்ட கிணற்றில் ஏராளமான மலைப்பாம்புகள் இருந்ததை பார்த்த மின்சார வாரிய ஆய்வாளர் ஒருவர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.  பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மருதமுத்து தலைமையில் வீரர்கள் தமயன், சுப்புராஜ், ராஜகுமாரன், திருஞானசம்பந்தம் உள்ளிட்டோரும், ஒட்டன்சத்திரம் வனத்துறை வனவர் ஜெயபால் தலைமையில் வனக்காப்பாளர்கள் நாகராஜ், ராஜேந்திரன். வனக்காவலர் கல்யாணி ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  மலைப்பாம்பை பிடிப்பதற்கென பிரத்யேகமான கருவிகளுடன் அனைவரும் நீண்ட நேரம் போராடி முதலில் இரண்டு மலைப்பாம்புகளை பிடித்தனர்.  மற்றொரு மலைப்பாம்பு கிணற்றில் தண்ணீர் உள்ள பகுதிக்கு சென்று விடவே, கிணற்றில் இருந்த முட்களை வெட்டி அந்த பாம்பையும் பிடித்தனர். 

இதில் இரண்டு பாம்புகள் தலா பத்து கிலோ எடையும், ஒரு பாம்பு சுமார் பதினைந்து கிலோ எடையும் இருந்தது.  பத்து கிலோ எடையுள்ள பாம்புகள் சுமார் 12 அடி நீளமும், இரண்டு வயது உடையதாகவும், பதினைந்து கிலோ எடையுள்ள பாம்பு 15 அடி நீளமும் மூன்று வயது உடையதாகவும் இருந்தது. ஒரே கிணற்றில் மூன்று பாம்புகள் பிடிபட்டதை பார்த்து அப்பகுதியினர் வியந்தனர்.  பிடிபட்ட பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக கொண்டு சென்று கொடைக்கானல் மலைப்பகுதியில் உயிருடன் விட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.